சென்னையில் இலங்கை தூதரகம் முற்றுகை - திருமாவளவன் கைது

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      அரசியல்
raj1

 

சென்னை, பிப்.23 - பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் இறுதிச்சடங்குக்காக இலங்கைக்கு சென்ற தொல்.திருமாவளவனுக்கு அங்கே அனுமதி மறுக்கப்பட்டு அதே விமானத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இதனை கண்டித்து சென்னையிலுள்ள இலங்கை தூதரக அலுவலகத்தை முற்றுகையிட்ட திருமாவளவன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர். விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக இலங்கையில் காலமானார். அவரது உடல் வல்வெட்டித்துறையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இலங்கைக்கு சென்று பார்வதியம்மாளுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவில் இலங்கைக்கு சென்றார். அங்கு கொழும்பு விமான நிலையத்தில் அதிகாலை 1.20 மணிக்கு சென்று இறங்கியபோது, இலங்கையிலுள்ள குடியுரிமை அதிகாரிகள், திருமாவளவனுக்கு அனுமதி மறுத்துள்ளனர். அதோடு இலங்கை அரசு அவரை அனுமதிக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினராம்.

இதுதொடர்பாக திருமாவளவனுக்கும், குடியுரிமை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. இலங்கை அரசின் உத்தரவு எழுத்துப்பூர்வமாக இருந்தால் அந்த உத்தரவின் நகலை அளிக்கும்படி திருமாவளவன் கோரினாராம். ஆனால், அதற்கும் அந்த அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து, வலுக்கட்டாயமாக இவரை அதே விமானத்தில் மீண்டும் சென்னைக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

அதிகாலை 5 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்த திருமாவளவன், உடனே தனது கட்சியினரை  தொடர்பு கொண்டு, இந்த செயலை கண்டித்து இலங்கை தூதரக அலுவலகத்தை முற்றுகையிட அழைப்பு விடுத்தார்.

இதன்படி திடீரென நேற்று காலை 11 மணியளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரண்டு, இலங்கை நாட்டின் கொடியை எறித்தும், ராஜபக்ஷேவுக்கு எதிராக கோஷமிட்டும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். எங்கள் தலைவரை அனுமதிக்காத இலங்கைக்கு, இங்கே எதற்காக உறவு நிறுவனம்(தூதரகம்) என்று கோஷமிட்டனர்.

ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கோஷங்களை முழங்கிவிட்டு, தூதரக அலுவலகத்தை நோக்கி முன்னேறிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், செயலாளர்கள் ரவிக்குமார் எம்.எல்.ஏ., கலைக்கோட்டுதயம், பொருளாளர் யூசுப், மாநில செய்தி தொடர்பாளர் வன்னி அரசு, கல்வி மற்றும் பொருளாதார இயக்க மாநில செயலாளர் கோட்டைக்காடு ஏ.துரை, இணை செயலாளர் கிட்டு (எ) கிருஷ்ணசாமி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், 30 பெண்கள் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டனர். பின்னர் ஆழ்வார்பேட்டையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் அடைக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: