முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்., ராணுவம் தாக்கியதில் இந்திய வீரர்கள் 5 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 6 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

 

ஜம்மு, ஆக.7 - பாகிஸ்தான் ராணுவமும்,தீவிரவாதிகளும், இந்திய எல்லைப் பகுதியில் மறைந்திருந்து நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். பூஞ்ச் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே இந்திய எல்லையின் உள் பகுதியில் 400 மீட்டர் தூரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.மேலும் இந்தத் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் பலத்தக் காயமடைந்தார்.

இறந்தவர்களில் ஒருவர் ஜூனியர் கமிஷனர் அதிகாரி அந்தஸ்தில் உள்ளவர் மற்ற 4 பேரும் வீரர்கள் என்று கூறப்படுகிறது. அந்தப் பகுதிக்கு கூடுதல் படை அனுப்பப்பட்டுள்ளது.  மூத்த ராணுவ அதிகாரிகளும் அங்கு விரைந்துள்ளனர். இதற்கிடையே இந்தப் பகுதியில் ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை என்று பாகிஸ்தான் மறுத்துள்ளது. இந்திய நிலைகள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தினால், இரு நாடுகளுக்கும் இடையே சீரான உறவு நீடிக்காது என்று  ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.

பூஞ்ச் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில்  ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆயுதங்ளுடன் வந்த  20 பேர் நள்ளிரவில் திடீரென தாக்குதல் நடத்தினர். அவர்கள் கண் மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் இறந்தனர் என்றும், பதிலுக்கு இந்திய ராணுவ வீரர்கள் திருப்பிச் சுட்டதாகவும், ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 பாகிஸ்தான் ராணுவ எல்லை பாதுகாப்புப் படை, பாகிஸ்தான் ராணுவம், லக்ஸர்- இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாகுதீன், ஜெய்ஸ், -இ-முகமத் என்ற தீவிரவாத இயக்கம் ஆகியவைகளை சேர்ந்த தீவிரவாதிகள்  இந்தத் தாக்குதலை நடத்தி உள்ளன. பாகிஸ்தான் ராணுவத்தின் 801 முஜாஹித் ரெஜிமன்ட் என்ற பாகிஸ்தான் ராணுவம் இந்தத் தாக்குதலை முன்னின்று நடத்தியுள்ளது. மறைந்திருந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில்  முகமது அன்வர் என்ற தீவிரவாதியும் ஒருவன் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 8-ம் தேதி பூஞ்ச்  பகுதியில் இந்தத் தாக்குதலை இவன் நடத்தியுள்ளார். இதுபோன்ற தாக்குதல் நடத்துவதில் இவர் வல்லவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவனை பாகிஸ்தான் ராணுவம் தனது வலைக்குள் வைத்துள்ளது.

 அடுத்த மாதம் நியூயார்க் நகரில் மன்மோகன்சிங்கும், பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீபும், பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.எல்லையில் நடந்துள்ள இந்த  தாக்குதலையொட்டி அந்த பகுதியில் நிலவும் சூழ்நிலை குறித்து  ராணுவ தலைமை தளபதி பிக்ரம்சிங் ஆய்வு செய்து  வருகிறார்.  

  இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனாலும் ராணுவுமும் தீவிரவாதிகளும் சேர்ந்து  நடத்திய தாக்குதலை பாகிஸ்தான் மறைக்கப் பார்க்கிறது. எங்கள் ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை என்று பாகிஸ்தான் கூறுகிறது. ஏற்கெனவே இந்திய ராணுவ வீரர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று அவரது தலையை அறுத்து பாகிஸ்தான் ராணுவம் அட்டூழியம் செய்தது. 

இந்திய ராணுவ வீரர்கள் 5 பேரை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக்கொன்ற சம்பவம் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் புயலைக் கிளப்பிது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மொத்தமாக எழுந்து நின்று பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர் . இந்த தாக்குதல் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதனால் இரு சபைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்