முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீரர்கள் கொலை: பாக்., ராணுவத்தின் சிறப்புபடை கைவரிசை

வெள்ளிக்கிழமை, 9 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஆக. 10 - காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதில் 5 இந்திய ராணுவ வீரர்கள் பலியானார்கள். பாகிஸ்தான் ராணுவமும், தீவிரவாதிகளும் ஒருங்கிணைந்து மிகவும் திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பான தகவல்களை உளவுத்துறை திரட்டியுள்ளது.

பூஞ்ச் செக்டாரில் ஊடுருவி இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்த சில மாதங்களுக்கு முன்பே பாகிஸ்தான் ராணுவம் முடிவு செய்து ஏற்பாடுகளை செய்தது. இதற்காக பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்புப்படை பிரிவில் இருந்து சில வீரர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

அந்த வீரர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. இந்திய எல்லைப் பகுதியில் எப்படி ஊடுருவ வேண்டும், எத்தனை நிமிடங்களுக்குள் தாக்குதலை நடத்திவிட்டு திரும்ப வேண்டும் என்று பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அமாவாசை தினத்தன்று தாக்குதல் நடத்த சிறப்புப் படைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி பாகிஸ்தான் சிறப்புப் படை வீரர்கள் நவீன ஆயுதங்களுடன் ஊடுருவி தாக்குதல் நடத்தினார்கள். திட்டமிட்டப்படி அவர்களது தாக்குதல் நடந்தது.

இந்த தகவல்களை வெளியிட்டுள்ள உளவுத்துறையினர், பாகிஸ்தான் ராணுவ சிறப்புப் படையில் உள்ள 'மூசா கம்பெனி பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் இந்த கைவரிசையை காட்டி இருக்க வேண்டும் என்ற சந்தேகத்தை வெளியிட்டுள்ளனர். இந்த சிறப்பு படையினர் அமெரிக்க ராணுவத்திடம் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த ஜனவரி மாதம் இந்திய ராணுவ வீரர் ஹேம் ராஜ் தலையை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் துண்டித்து எடுத்து சென்றனர். அந்த சம்பவத்தின்போதும் மூசா கம்பெனி பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் கைவரிசை காட்டி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. மீண்டும் தற்போது மூசா படையைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி இருப்பதாக தெரிகிறது. இந்த தாக்குதலின்போது 6 தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவ வைத்ததாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்புப்படையே இந்திய வீரர்கள் 5 பேரை கொன்றது உறுதிபடுத்தப்பட்டிருப்பதால், பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியாவின் கண்டனத்தை பாகிஸ்தான் கண்டு கொள்ளவில்லை. வழக்கம்போல தாக்குதல் சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி வருகிறது. 

இதையடுத்து அடுத்த மாதம் இந்தியா- பாகிஸ்தான் செயலாளர்கள் அளவில் நடப்பதாக இருந்த பேச்சுவார்த்தை நடக்குமா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்