முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர் நிறுத்தத்தை மீறும் பாக்.,: 7,000 முறை துப்பாக்கிச்சூடு

சனிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

ஜம்மு, ஆக. 11 - ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு அருகே இந்திய நிலைகள் மீது கிட்டத்தட்ட 7 மணி நேரம் பாகிஸ்தான் துருப்புக்கள் அடாவடியாக துப்பாக்கிச் சூடு நடத்தின. கிட்டத்தட்ட 7 ஆயிரம் முறை நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் படையினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் அடாவடியாக மீறி இந்த காரியத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு இந்திய ராணுவத்தினரும் பதிலடி கொடுத்தனர். இதனால் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையால் அந்த பகுதிகளில் வாழும் மக்கள் பீதியால் உறைந்து போயினர். 

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அவ்வப்போது இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் அந்த முயற்சியை இந்திய ராணுவத்தினர் அவ்வப்போது முறியடித்து வருகிறார்கள். பாகிஸ்தான் ராணுவமும் அவ்வப்போது எல்லைப் பகுதியில் நமக்கு தொல்லை கொடுத்து வருகிறது. கடந்த 6 ம் தேதியன்று பாகிஸ்தான் ராணுவத்தினர் தலைமையில் பயங்கர ஆயுதங்கள் ஏந்திய 20 பேர் இந்திய எல்லைப் பகுதியில் புகுந்து அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியதில் 5 இந்திய வீரர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர். இந்த சம்பவத்திற்கு தீவிரவாதிகள்தான் காரணம் என்று மத்திய ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி கூறியிருந்தார். ஆனால் ராணுவமோ பாகிஸ்தான் படையினர்தான் காரணம் என்று கூறியிருந்தது. இவ்வாறு முரண்பட்ட தகவல் வெளியானதால் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. தவறான தகவலை தந்த ஏ.கே. அந்தோணி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எல்.கே.அத்வானி உட்பட பல தலைவர்கள் வலியுறுத்தினார்கள். 

இதையடுத்து நெருக்கடிக்கு ஆளான மத்திய அமைச்சர் அந்தோணி பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார். அப்போது அவர் முதலில் கிடைத்த தகவலைத்தான் சொன்னேன். எல்லையில் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் ராணுவம்தான். அவர்கள்தான் இதற்கு பொறுப்பு என்று பல்டியடித்து தனது புதிய விளக்கத்தை தெரிவித்தார். இருப்பினும் நமது பொறுமையை பாகிஸ்தான் சோதிக்கிறது. தொடர்ந்து இது போல் நடந்தால் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் அந்தோணி பாராளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனிடையே பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு நடத்தக் கூடாது என்று அனைத்து கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகிறார்கள். அடுத்த மாதம் நியூயார்க்கில் ஐ.நா. பொதுச் சபை கூட்டம் நடக்கிறது. அப்போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் பேச்சு நடத்த இந்திய பிரதமர் மன்மோகன்சிங் திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்த பேச்சுவார்த்தையை நடத்தக்கூடாது. ஷெரீப்பை சந்திக்கவும் கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி வருகிறார்கள். 

இந்த நிலையில் 5 இந்திய வீரர்கள் பலியான ஒரு சில நாட்களிலேயே பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் வாலாட்ட தொடங்கி விட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு அருகே இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் 7 மணி நேரம் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் அதாவது 7 ஆயிரம் முறை துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. கடுமையான ஆயுதங்களை பயன்படுத்தியும், வெடிகுண்டு வீசியும் கூட இவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் இப்படி அடாவடியாக மீறியுள்ளது. இது மிகப் பெரிய போர் நிறுத்த ஒப்பந்த மீறல் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இருந்தாலும் இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இந்திய தரப்பில் இல்லை. தாக்குதலை சமாளித்த இந்திய ராணுவத்தினர் பின்னர் அதற்கு தகுந்த பதிலடியும் கொடுத்தனர். பாகிஸ்தான் படையினர் இந்திய நிலைகள் மீது கண்மூடித்தனமாக தாக்கியதாகவும் தகவல்கள் கூறுகின்றன. கடந்த வெள்ளிக் கிழமை இரவு 10.20 மணியளவில் இந்த சம்பவம் பூஞ்ச் மாவட்டத்தில் துர்காபட்டாலியன் பகுதியில் நடந்ததாக ராணுவ உயரதிகாரி எஸ்.என். ஆச்சார்யா தெரிவித்தார். 7 ஆயிரம் முறை அவர்கள் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர்.  உயிரிழப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே அவர்கள் சனிக்கிழமை காலை 4.30 மணி வரை இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இது மிகப் பெரும் போர் நிறுத்த ஒப்பந்த மீறலாகும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். அதே நேரம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவத்துக்கு தக்க பதிலடி கொடுத்தது. இரு தரப்பிலும் கடுமையான துப்பாக்கி சண்டையும் நடந்தது. இயந்திர துப்பாக்கிகளும் அப்போது பயன்படுத்தப்பட்டன. இதனால் ஏற்பட்ட சப்தத்தால் எல்லை பகுதியில் வாழும் மக்களிடையே கடும் பீதி ஏற்பட்டதாம். இந்த சண்டையை அடுத்து இந்தியா, பாகிஸ்தான் இடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை இனி நடக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், ஒரு பக்கம் பேச்சுவார்த்தை என்று சொல்லும் பாகிஸ்தான் மறுபக்கம் அடாவடி செயல்களில் ஈடுபட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்னால் 2 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்களில் ஒருவரது தலையையும் துண்டித்து எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள். இப்படிப்பட்ட அடாவடி செயல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவது இந்திய மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 5 வீரர்களை அவர்கள் கொன்றதால் குறைந்தபட்சம் 50 பாகிஸ்தான் வீரர்களையாவது கொல்ல வேண்டும் என்று பாபா ராம்தேவ் உட்பட ஒரு சில தலைவர்கள் சொல்லும் அளவுக்கு நிலைமை கைமீறி போய்க் கொண்டிருக்கிறது என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்