முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானிகள் வேலை நிறுத்தம் வாபஸ் ஏர் - இந்தியா விமானங்கள் இயங்கின

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மே - 8 - ஏர் இந்தியா விமானிகள் கடந்த 10 நாட்களாக நடத்திய வேலை நிறுத்தப்போராட்டம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து அந்நிறுவனத்தின் விமானங்கள் நேற்று மீண்டும் இயங்கத்தொடங்கின. என்றாலும் சகஜ நிலைக்கு திரும்ப இன்னும் சில நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இந்த வேலை நிறுத்தத்தில் சுமார் 800 விமானிகள் பங்கேற்றனர். இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமானப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. தாங்கள் போகவேண்டிய இடங்களுக்கு உரிய நேரத்தில் போக முடியாமல் விமானப் பயணிகள் அவதிக்கு உள்ளானார்கள். டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை ஆகிய விமான நிலையங்களில் இருந்து ஏராளமான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஏற்கனவே புக்கிங் செய்த விமான பயணிகள் அதிக கட்டணம் கொடுத்து தனியார் விமானங்களில் பயணம் செய்தனர். விமானிகளின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் விமானிகள் சங்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதேபோல ஏர் இந்தியா நிர்வாகமும் விமானிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பல நாட்களாக இழுபறியில் நீடித்துவந்த இந்த பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் ஒரு முடிவுக்கு வந்தது. அதன்படி விமானிகளின் சில கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக ஏர் இந்தியா நிர்வாகம் கூறியுள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட ஏர் இந்தியா விமானிகள் தங்களது 10 நாள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானப் போக்குவரத்து நேற்று மீண்டும் துவங்கியது. இருந்தாலும் விமான போக்குவரத்து சகஜ நிலைக்கு வருவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும் என்று ஏர் இந்தியா அதிகார வட்டாரங்கள் கூறியுள்ளன.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்