முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

சனிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஆக. 11 - ஸ்டெர்லைட் ஆலை இயங்கலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கியுள்ள ஆணையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப் போவதாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடியில் சுற்றுச்சூழலை நச்சுமயமாக்கி வரும் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை தொடர்ந்து செயல்படலாம் என்று டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் இறுதி ஆணை பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பு மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 17ஆண்டுகளாக போராடி வருகிறேன். 

கடந்த மார்ச் மாதம் 23 ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுப் புகையால் தூத்துக்குடி மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர். அதனால் ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மார்ச் 29 ம் தேதி ஆணை பிறப்பித்தது. ஆனால் ஏப்ரல் 2 ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை இயங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது. அதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளேன். 

மாசு கட்டுப்பாட்டு வாரிய ஆணையை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் ஆலையை தொடர்ந்து இயக்கலாம் என்று தீர்ப்பாயம் இறுதி ஆணை தந்துள்ளது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுப்பேன். ஸ்டெர்லைட் ஆலையை அகற்றுவதற்கான போராட்டம் தொடரும் என்று அதில் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்