முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியா மருமகனுக்கு ஊழலில் பெரும் பங்கு: அசோக்

ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2013      ஊழல்
Image Unavailable

 

சண்டிகர்,ஆக. 12  - அரியானாவில் 8 ஆண்டு காலத்தில் ரூ. 3.5 லட்சம் கோடி அளவுக்கு நில மோசடி நடைபெற்றது. இந்த ஊழலில் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு பெரும் பங்கு உண்டு என ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கா 100 பக்க அறிக்கை தாக்கல் செய்துள்ளார். ஆனால் பா.ஜ.க.வின் கைப்பாவையாக கெம்கா செயல்படுகிறார் என்கிறது காங்கிரஸ். சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா ஸ்கைலைட் ஆஸ்பிட்டாலிட்டி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் ரியல் எஸ்டேட் துறையில் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளது. அரியானா மாநில நகர மற்றும் ஊரக திட்டதுறையின் அனுமதி பெற்று நிலத்தை கையகப்படுத்தி பெரிய நிறுவனங்களுக்கு ஸ்கைலைட் ஆஸ்பிட்டாலிட்டி விற்பனை செய்துள்ளது. இதில் பல நில பரிவர்த்தனைகள் மோசடியானவை. ஓம்காரேஸ்வர் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்திடம் இருந்து ஸ்கைலைட் ஆஸ்பிட்டாலிட்டி நிறுவனம் நிலத்தை வாங்கியுள்ளது. குறுகிய காலத்திலேயே அந்த நிலத்தை டி.எல்.எப். நிறுவனத்திற்கு ஸ்கைலைட் ஆஸ்பிட்டாலிட்டி நிறுவனம் விற்று விட்டது. இதே போல பல முறைகேடுகள் நடந்துள்ளன. சம்பந்தப்பட்ட இலாகாவின் உயரதிகாரியாக இருந்த அசோக் கெம்கார் இந்த பரிவர்த்தனைகளை ரத்து செய்து விட்டார். சொத்து விற்பனை செய்யப்படுகிறது என்றால் அதற்குரிய பணத்தை முழுமையாக செலுத்த வேண்டும். அல்லது குறிப்பிட்ட தொகையை பணமாக செலுத்தி விட்டு எஞ்சிய தொகையை எப்போது செலுத்துவது என்பது குறித்து எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளிக்க வேண்டும். ஆனால் ராபர்ட் வதேரா சம்பந்தப்பட்ட பரிவர்த்தனையில் பணமும் செலுத்தவில்லை. எழுத்துப்பூர்வமாக வாக்குறுதியும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலிட அழுத்தம் காரணமாக அசோக் கெம்கால் பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். அது மட்டுமல்லாமல் அவர் மீது குற்றமும் சாட்டப்பட்டது. இது குறித்து விசாரிக்க மூவர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவுக்கு 100 பக்க விளக்க அறிக்கையை அசோக் கெம்கால் அனுப்பி வைத்துள்ளார். இதில் நில மோசடி ஊழல்களை அவர் பட்டியலிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள சில முக்கிய விபரங்கள் வருமாறு:

நகர மற்றும் ஊரக திட்டமிடல் துறையிடம் இருந்து டி.எல்.எப். நிறுவனத்திற்கு நிலத்தை கைமாற்றுவதற்காக ராபர்ட் வதேராவின் ஸ்கைலைட் ஆஸ்பிட்டாலிட்டி நிறுவனம் இடைத்தரகராக செயல்பட்டுள்ளது. இதன் மூலம் அது கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்துள்ளது. ஒருஏக்கருக்கு ரூ. 15. 78 கோடி அளவுக்கு ராபர்ட் வதேரா முறைகேடாக சம்பாதித்துள்ளார். அரியானாவில் 2005 முதல் 2012 முடிய 21 ஆயிரத்து 366 ஏக்கர் நிலம் பரிவர்த்தனையாகி உள்ளது. ஒரு ஏக்கருக்கு ரூ. 15.78 கோடி என கணக்கிட்டால் ரூ. 3.5 லட்சம் கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. இதில் ராபர்ட் வதேராவுக்கும் அரசியல் பெரும்புள்ளிகளுக்கும் தொடர்புள்ளது. வங்கி காசோலை எண்களும் போலியாக குறிப்பிடப்பட்டுள்ளன. ரூ. 7.5 கோடிக்கு ஸ்கைலைட் ஆஸ்பிட்டாலிட்டி வாங்கிய நிலம் குறுகிய காலத்தில் டி.எல்.எப். நிறுவனத்துக்கு ரூ. 58 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. ஸ்கைலைட் நிறுவனம் வாங்கிய போது அந்த நிறுவனம் செலுத்திய மூலதனம் ரூ. ஒரு லட்சம் மட்டுமே. அதில் செலவாக ரூ. 43 ஆயிரம் மட்டும் காட்டப்பட்டுள்ளது. எனவே பெருந்தொகை கொடுத்து ஸ்கைலைட் நிறுவனம் நிலத்தை வாங்கியது மோசடி செய்வதற்காகத்தான் என்பது புலனாகிறது. இந்த ஸ்கைலைட் நிறுவனம் இடைத்தரகராக செயல்பட்டு கோடிக்கணக்கில் பணத்தை குவித்துள்ளது என்று அவர் கூறினார்.  

ஐ.ஏ.எஸ். அதிகாரியின் இந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அப்ஸல் மறுப்பு தெரிவித்துள்ளார். கெம்காவுக்கு பின்னால் பா.ஜ.க. உள்ளதை உணருகிறேன். எதிர்க்கட்சிகளின் கைப்பாவையாக அவர் செயல்படுகிறார். உத்தர பிரதேசத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்த துர்கா சக்தி நாக்பாலை காங்கிரஸ் ஆதரித்தது. இந்த சமயத்தில் கெம்காவை பா.ஜ.க. தூண்டி விட்டுள்ளது. அவர் வதேரா மீது சரமாரியாக புகார் கூறி பேட்டியளித்துள்ளார். வதேரா நில விவகாரம் தொடர்பாக கெம்கா தனது பதிலைத்தான் அறிக்கையாக அளித்துள்ளார். அவர் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவில்லை. அறிக்கைக்கும் பதிலுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இப்புகார் தொடர்பாக அரியானா அரசு அமைத்த 3 பேர் குழு விசாரணை நடத்தி அறிக்கை அளித்துள்ளது. அதில் கெம்காவின் குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்