முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்கத்தில் நக்சல்கள் மிகுந்த 38 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குபதிவு

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2011      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா,மே. - 8 - மேற்கு வங்கத்தில் 5 வது கட்டமாக 38 தொகுதிகளிக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. நக்சல் தீவிரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த இந்த தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்கு பதிவு நடந்தது. அனைத்து தொகுதிகளிலும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கு 6 கட்டங்களாக தேர்தல் கமிஸனால் தேர்தல் அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 242 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக வாக்கு பதிவு நடந்து முடிந்துள்ளது.
நக்சல் பாதிப்பு மிகுந்த மேற்கு மிட்னாபூர், புரூலியா, பங்குரா மற்றும் புர்த்வான் ஆகிய மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளுக்கு 5 வது கட்டமாக நேற்று தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 5 மணி வரையிலும் அமைதியாக நடந்து முடிந்தது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தனர். 38 தொகுதிகளிலும் 6 ஆயிரம் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
பாதுகாப்புக்கென 2 ஹெலிகாப்டர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நேற்று நடந்த தேர்தலில் 193 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். மொத்தம் 74 லட்சம் வாக்காளர்களுக்காக 9 ஆயிரத்து 425 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆளும் இடதுசாரி கூட்டணியில் இடது கம்யூனிஸ்டு 32 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்டு, பார்வர்டு பிளாக் தலா 3 தொகுதிகளிலும் போட்டியிட்டன. எதிர் கூட்டணியில் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த வேட்பாளர்கள் 33 தொகுதிகளிலும், காங்கிரசார் 5 தொகுதிகளிலும் போட்டியிட்டனர். பா.ஜ.கவும் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.
சுகாதார துறை அமைச்சர் சூர்யகந்தா மிஸ்ரா, மேற்கு வங்க காங்கிரஸ் கட்சி தலைவர் மனாஸ்புனியா ஆகியோர் நேற்றைய தேர்தலில் முக்கிய வேட்பாளர்கள் ஆவார்கள். இறுதி கட்ட தேர்தல் வரும் 10 ம் தேதி நடக்கவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்