முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிப்ட் ஆபரேட்டராக இருந்து மோசடி மன்னனாக மாறிய விவகானந்தன்

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2011      தமிழகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம், மே.- 8 - தமிழகத்தில் பல பகுதிகளிலும் மேலும்  பல மாநிலங்களில் வேலை வாங்கித்தருவதாகவும் குறைந்த விலைக்கு தங்கம் கொடுப்பதாகவும் கூறி ஏராளமானோரை ஏமாற்றி ரூ. பல கோடிகளை மோசடி செய்த விவேகானந்தனின் மனைவியை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். லிப்ட் ஆபரேட்டராக வாழ்க்கையை துவக்கிய விவேகானந்தன் சொகுசு வாழ்க்கை மோகத்தால் மோசடிகளில் ஈடுபட தொடங்கியதாக மனைவி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.  
பொள்ளாச்சியை சேர்ந்த விவேகானந்தன் என்ற வெங்கடேஷ்(38). கேரள மாநிலம் பந்தனம் திட்டாவை சேர்ந்த பிருந்தா என்ற ரோஸ் மேரியை திருமணம் செய்தார். அவர்களுக்கு ராகுல், மதுஸ்ரீ என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். விவேகானந்தன் 9 ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். பிருந்தா பிளஸ் 2 படித்துள்ளார். எரிமேலியில் லிப்ட் ஆபரேட்டராக வேலை பார்த்த வெங்கடேஷ், கேரளாவில் ஒரு திருமணத்தில் பிருந்தாவை பார்த்துள்ளார். கண்டவுடன் காதல் என்பது போல் அவர்கள் முதல் பார்வையிலேயே காதல் கொள்ள ஆரம்பித்தனர். பின்னர் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். லிப்ட் ஆபரேட்டர் வேலை செய்து கொண்டிருக்கும் போதே விவேகானந்தன் வெளிநாடுகளுக்கு சென்று எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்கி வந்து தமிழகத்தின் பல பகுதிகளில் விற்பனை செய்துள்ளார். அதில் குறைந்த அளவிலேயே வருமானம் கிடைத்த வெங்கடேசனும் அவரது குடும்பத்தினரும் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டனர். அதனால் என்ன செய்வது என ஆலோசித்தனர். உடனடியாக சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு பணம் கிடைக்காது என்பதை அறிந்த அவர்கள் மோசடி செய்வதில் ஆர்வம் காட்ட துவங்கினர். இதற்காக திருப்பூர், ஈரோடு, கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை அவர்கள் தேர்வு செய்தனர். ஓரிடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அவர்கள் குடியிருந்தது இல்லை. வசிக்கும் பகுதியில் விவேகானந்தன் வகை வகையான பல லட்சம் மதிப்புள்ள சொகுசு கார்களில் பவனி வருவது வழக்கம். தான் பெரிய ரியல் எஸ்டேட் ஓனர் என்றும் தனக்கு பெரிய அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் தெரியும் என்றும் பல தொழில்கள் தமிழகத்தில் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் உள்ளதாக புரபகண்டா செய்வார். அரசுத்துறைகளில் உயர்வேலைகளையும் வெளிநாட்டில் தனியார் கம்பெனிகளில் அதிக சம்பளத்தில் வேலைகளையும் குறைந்த விலையில் தங்க கட்டிகளும் வாங்கித்தருவதாக கூறி பலரை நம்ப வைத்து ஏமாற்றி கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிக்கொண்டு அப்பகுதியை காலி செய்து அடுத்த ஊர்களில் குடியேறி அங்குள்ள அப்பாவி மக்களிடம் மோசடி செய்வதும் விவேகானந்தனின் வழக்கம். இதையே கடந்த 13 ஆண்டுகளாக தொழிலாக செய்துவந்தார்.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மதுரைக்கு அருகில் உள்ள திருநகரில் விவேகானந்தன், மனைவி, குழந்தைகள் மைத்துனருடன் வாடகை வீட்டில் குடியேறினார். மேலும் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியில் நீச்சல்குளத்துடன் கூடிய சொகுசு பங்களாவையும் விவேகானந்தன் கட்டியுள்ளார். விவேகானந்தனின் இந்த பகட்டான நடவடிக்கைகளால் திருநகர், திருமங்கலம், மதுரை, காரியாப்பட்டி, விருதுநகர், சிவகங்கை ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் விவேகானந்தந் உண்மையிலேயே பெரும் செல்வந்தர் அவரோடு பழகினாலே போதும் நாமும் பெரிய ஆளாகி விடலாம் என்று கனவு கண்டனர். அதனால் பலர் விவேகானந்தனுடன் நட்பு கொண்டு அவர் மூலம் தங்களது நண்பர்கள் உறவினர்களுக்கு ஆசிரியர், சத்துணவு வேலைகளும், வெளிநாட்டில் அதிக சம்பளத்தில் வேலைகளும் தங்ககட்டிகளை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாகவும் லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்து வந்தார். குறைந்த விலைக்கு தங்ககட்டிகள் கிடைக்கும் என ஆசைபட்டு ஏராளமானோர் விவேகானந்தனிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்தனர்.  ஏமாந்தவர்களிடம் பல கோடிகளை அபேஸ் செய்த விவேகானந்தன், அவரது மனைவி பிருந்தா, மைத்துனர் கெவின் ஆகியோர் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருநகருக்கு வந்து மோசடியில் ஈடுபட்டு அங்கிருந்தும் தலைமறைவாகி விட்டனர்.
திருநகரில் குடியிருந்த போது பூரணசந்திரன் மற்றும் அவரது நண்பர்களிடம் குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறி ரூ. 75 லட்சத்தை பெற்றுக் கொண்டு மறுநாளே எஸ்கேப் ஆகி விட்டனர். எங்கு சென்றாலும் அங்கு ஒரு புதிய சொகுசு காரை வாங்குவது விவேகானந்தனின் வழக்கமாக இருந்தது.
மேலும் தினம் ஒரு விலையுயர்ந்த உடைகள் உடுத்துவதையும், குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு 2 முதல் 3 ஆடைகள் அணிந்தும் நேரத்திற்கு ஒரு காரில் பவனி வந்தும் வாடகைக்கு குடியேறும் வீடுகளில் தங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொள்ளும் வகையில் அங்கு தங்களது சொந்த செலவிலேயே மாற்றங்களையும் செய்து வாழ்ந்துள்ளனர். திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் பல கோடி ரூபாயில் நீச்சல் குளத்துடன் கூடிய புதிய பங்களாவையும் விவேகானந்தன் கட்டியுள்ளார். இது தவிர கொடைக்கானல், ஊட்டி, பெங்களூர், புதுச்சேரி ஆகிய இடங்களிலும் விலை மதிக்கத்தக்க காலி இடங்களையும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாக்களையும் கட்டி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் மதுரையில் பதுங்கியிருந்த பிருந்தாவை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அதற்கு நேர்மையான வழி இல்லை என அறிந்து இது போன்ற மோசடிகளில் ஈடுபட்டு குறுக்கு வழியில் பல கோடியை மோசடி செய்ததாகவும் அப்பணத்தை கொண்டு மிகவும் ஆடம்பரமாக விவேகானந்தன் குடும்பத்தினர் வாழ்ந்து வந்ததாக விவேகானந்தனின் மனைவி பிருந்தா போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.  
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவாவில் விவேகானந்தனை கைது செய்த தனிப்படையினர் அவரிடம் இருந்து 6 விலை உயர்ந்த சொகுசு கார்களையும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சொகுசு பைக்கையும் ஒன்றேகால் கிலோ தங்க கட்டிகளையும், ஒன்றேகால் கோடி ரொக்கப் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விவேகானந்தன் பயன்படுத்திய, போலீசாரால் கைப்பற்றப்பட்ட சொகுசு கார்களின் விவரம் பென்ஸ் கார் ரூ.37 லட்சம், ஸ்கார்பியோ ரூ.9 லட்சம், பஜீரோ ரூ.23 லட்சம், மாருதி பெலினோ ரூ.9 லட்சம், போர்டு ரூ. 8 லட்சம், யமாகா டுகாட்டி பைக் ரூ.1.30 லட்சம் மற்றும் பல லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் ஒன்று மற்றும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள ரோலக்ஸ் பிளாட்டின வாட்சும் பறிமுதல் செய்யப்பட்டது. மோசடி செய்த பணத்தில் இருந்து விவேகானந்தன் குடும்பத்தினர் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

தொடரும் மோசடி புகார்கள்
விவேகானந்தன் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் கட்டியுள்ள சொகுசு பங்களா அருகே குடியிருப்பவர் ஓய்வு பெற்ற உதவிக் கலெக்டர் ஜெயம் பெருமாளின் மகன் சிவன் கவி, சுற்றுப் பகுதியை சேர்ந்தவர்களிடம் வேலை வாங்கித் தருவதாக பல லட்ச ரூபாயை வசூல் செய்து விவேகானந்தனிடம் கொடுத்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட விவேகானந்தனின் மனைவி பிருந்தா போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் மதுரை வசந்த நகரை சேர்ந்த மனோகரன் என்பவர் புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
எனது மகனுக்கு பொதுப் பணித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 20.2.2011 ல் ஜெயம் பெருமாள், அவரது மனைவி சிவகாமி, மகன் சிவன் கவி ஆகியோர் 10 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாகவும் திருப்பூர் அவினாசி ரோடு பகுதியை சேர்ந்த ஜஸ்டின் என்பவர் கொடுத்த புகாரில் தனது மனைவி ரோஸ்லின் மேரிக்கு ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக 29.1.2011 ல் மேற்பட மூன்று பேரும் 5 லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றி விட்டதாகவும் புகார் கொடுத்துள்ளனர். இவர்கள் மூன்று பேர்கள் மீதும் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே சிவன்கவியும், அவரது சகோதரி நிகிதாவும் திண்டுக்கல் பகுதியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளதாகவும் புகார்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மோசடி மன்னன் விவேகானந்தனுக்கும், கவிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதையும், விவேகானந்தனின் மோசடிக்கு கவி உதவி உள்ளதையும் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்