முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதிய உணவு திட்டத்தில் சீர்திருத்தம்: பிரதமர் தகவல்

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2013      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.16 - பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தில் சீர்திருத்தம் செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். நாட்டின் 67-வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் சிங் கொடியேற்றிவைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்படும் என்றார். மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவானது சத்தானதாகவும் சுகாதார முறையில் அதை சமைக்கவும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். பீகார் மாநிலத்தில் சத்துணவு வழங்கப்பட்டதில் 24 மாணவ, மாணவிகள் உயிரிழந்தனர். இந்த மாதிரியான கோர சம்பவம் இனிமேல் நாட்டின் எந்த பகுதியிலும் நடைபெறக்கூடாது. மாணவர்களுக்கு நாம் வழங்கும் மதிய உணவானது சத்தானதாக இருக்க வேண்டும் என்பதோடு சுகாதாரமான முறையில் சமைத்து அவர்களுக்கு வழங்கவும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

நாடு முழுவதும் 11 கோடி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதை நிறைவேற்றுவதில் முன்னேற்றம் தேவை. மதிய உணவு திட்டமானது குழந்தைகள் நல்ல முறையில் கல்வி கற்கவும் சத்து கிடைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கிறது. மதிய உணவு வழங்கும் திட்டம் சிறப்பாக நடைபெறவேண்டியது மிகவும் அவசியமாகும் என்றார். நாட்டில் கல்விக்கான உள்கட்டமைப்புகளை பெருக்குவதில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதை மன்மோகன் சிங் தனது உரையில் விளக்கமாக கூறினார். கடந்த 9 ஆண்டுகளில் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக பெருகி உள்ளது. கல்வி கற்க உரிமை சட்டத்தை எங்கள் அரசுதான் கொண்டுவந்தது. இதனால் நாட்டில் பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. நாட்டில் ஏழைக்குடும்பத்தை சேர்ந்த மாணவர்களும் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள குடும்பத்தை சேர்ந்த மாணவர்களும் கல்வித்தொகை பெற பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தற்போது 2 கோடிக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. உயர்கல்வி பெற வசதியாக புதியதாக 8 புதிய ஐ.ஐ.டி.கள், 7 புதிய ஐ.ஐ.எம்.எஸ்.கள், 16 மத்திய பல்கலைக்கழகங்கள்,10 புதிய என்.ஐ.டி.கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த புதிய உயர்கல்வி நிலையங்களில் ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சி படிப்பில் மாணவர்களை இழுப்பதற்கும் வெளிநாடுகளில் உள்ள இந்திய விஞ்ஞானிகளை நாடு திரும்பவும் இந்த உயர்தொழில்நுட்ப கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் மன்மோகன் சிங் தனது உரையில் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்