முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பி.க்கள் விவகாரம்: ஹமீது அன்சாரி மறுப்பு

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2013      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, ஆக. 16 - மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களை அராஜக கும்பலின் கூடாரம் என்பது போல கடுமையாக விமர்சித்த ஹமீது அன்சாரி வெளியிட்ட கருத்தை திரும்ப பெற வேண்டும் என்று மாநிலங்களவையில் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனால் தனது கருத்தை திரும்ப பெற மறுத்த அன்சாரி, எந்த சூழ்நிலையில் தான் அவ்வாறு பேசினேன் என்பதை மாநிலங்களவை செயலகம் ஆராயும் என்று கூறினார். 

மாநிலங்களவை அதன் தலைவர் ஹமீது அன்சாரி தலைமையில் தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜெட்லி அவைக்குள் அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களை பார்த்து நீங்கள் ஆட்சேபகரமான வார்த்தையை பயன்படுத்தி விமர்சித்துள்ளீர்கள். இதனால் அவையின் அனைத்து உறுப்பினர்களும் வருத்தம் அடைந்துள்ளனர். அதை நீங்கள் திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவரை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் சீதாராம் எச்சூரி நீங்கள் உறுப்பினர்களை பேசிய விதம் குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்றார். 

அதை தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்தை திரும்ப பெற வேண்டும் என்று பா.ஜ.க உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர். ஆனால் அவ்வாறு செய்ய மறுத்த அன்சாரி, நான் யாரையும் குற்றம் சாட்டி அக்கருத்தை வெளியிடவில்லை. நான் எந்த சூழ்நிலையில் அந்த கருத்தை வெளியிட்டேன் என்பதை மாநிலங்களவை செயலகம் ஆய்வு செய்யட்டும். எனது பொறுப்பு அரசை சார்ந்தது அல்ல. ஹாக்கி போட்டியில் நடுவருக்கு உள்ள பொறுப்பை போன்றது. அதில் உள்ள விதிகளை போலவே சிவப்பு கார்டு, மஞ்சள் கார்டு கொடுக்க சில விதிகள் உள்ளன. அதை நான் பின்பற்றுகிறேன். 

நீடித்து வரும் இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவை விதிகள் தொடர்பாக தனியாக ஒரு கூட்டத்தை கூட்டி உறுப்பினர்களுடன் விவாதிக்க விரும்புகிறேன் என்றார். ஆனால் நீங்கள் பயன்படுத்திய வார்த்தை ஆட்சேபகரமானது என்று பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் கூறினர். அதை தொடர்ந்து உறுப்பினர்கள் சில நிமிடங்கள் அமளியில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து கேள்வி நேரம் தொடங்க ஹமீது அன்சாரி அனுமதி அளித்தார். அப்போது தெலுங்கானா எதிர்ப்பு ஆந்திர பிரதேச உறுப்பினர்கள் எங்கள் மாநிலத்துக்கு நீதி வேண்டும் என்று குரல் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். ராபர்ட் வதேராவின் நில மோசடி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என பா.ஜ.க. உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர். 

இதை தொடர்ந்து ஹமீது அன்சாரி வேண்டுகோள் விடுத்ததால் அவையில் கேள்வி நேரம் தொடர எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒத்துழைத்தனர். நண்பகல் 12 மணிக்கு பிறகு துணை தலைவர் பி.ஜே. குரியன் தலைமையில் அவை கூடியதும் மும்பையில் கடற்படை தளத்தில் சிந்துரக்சா நீர்மூழ்கி கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பாதுகாப்பு அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என சிவசேனா உறுப்பினர் பரத்குமார் ரெளத், பா.ஜ.க உறுப்பினர் சந்தன் மித்ரா ஆகியோர் குரல் கொடுத்தனர். அப்போது பி.ஜே. குரியன் சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு பாதுகாப்பு அமைச்சர் நேரில் பார்வையிட சென்றுள்ளார். அவர் வந்தவுடன் நிச்சயம் விளக்கம் அளிப்பார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்