முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி ஊழல் வழக்கில் தயாளு, அனில்அம்பானி பெயர்களை சேர்க்க வழக்கு தாக்கல்

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2011      ஊழல்
Image Unavailable

புது டெல்லி, மே. - 9 - நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கில் தமிழக முதல்வர் கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாள், ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி ஆகியோரது பெயர்களையும் சேர்க்க வேண்டும் என்று டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் டெல்லியை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணையை மே 24 ம் தேதிக்கு நீதிபதி ஷைனி தள்ளி வைத்தார்.
உலகிலேயே இமாலய ஊழலாக கருதப்படுவது ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலாகும். காரணம் இந்த ஊழலால் மத்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 1.76 லட்சம் கோடி என கூறப்படுகிறது. இந்த ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராசா, அவரது செயலாளர்கள் ஆர்.கே. சந்தோலியா, சித்தார்த்த பெகுரா மற்றும் ஷாகித் உஸ்மான் பல்வா மற்றும் 5 நிறுவன அதிகாரிகள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் கைதான ராசா உள்ளிட்ட பலரும் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி கைமாறிய விவகாரம் அம்பலமானது. இந்த டி.வியில் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு 20 சதவீத பங்குகளும், கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகளும், இதன் நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கு 20 சதவீத பங்குகளும் உள்ளன. கலைஞர் டி.விக்கு ரூ. 214 கோடி கைமாறிய விவகாரம் தொடர்பாக கனிமொழியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். பின்னர் சி.பி.ஐ. சார்பில் கனிமொழிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. மே. 6 ம் தேதி சிறப்பு கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு உத்தரவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து அமலாக்கத் துறையும் கனிமொழி எம்.பிக்கு சம்மன் அனுப்பியது. இதையடுத்து கடந்த 4 ம் தேதியன்று கனிமொழி டெல்லி புறப்பட்டு சென்றார். பின்னர் 6 ம் தேதி அவர் தனிக்கோர்ட்டில் ஆஜரானார். அன்றே அவர் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கனிமொழியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி வருகிற 14 ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார். ஆனாலும் தினந்தோறும் நீதிமன்றம் வந்து கையெழுத்திட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். 14 ம் தேதி வரை கனிமொழி கைதாக மாட்டார் என்பது இதன் மூலம் தெரிகிறது. மே 14 ம் தேதியன்று அவருக்கு பெயில் கிடைக்குமா? அல்லது ஜெயில் தண்டனை கிடைக்குமா என்பது தெரிந்து விடும்.
இந்த நிலையில் கலைஞர் டி.வியில் 60 சதவீத பங்குகளை வைத்திருக்கும் தயாளு அம்மாள் பெயர் சி.பி.ஐ. குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப்படவே இல்லை. 20 சதவீத பங்குகளை வைத்திருக்கும் கனிமொழியை சேர்த்திருக்கும் போது 60 சதவீத பங்குகளை வைத்திருக்கும் தயாளு அம்மாள் பெயரை குற்றப்பத்திரிக்கையில் சேர்க்காதது ஏன் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இதில் புலனாய்வுத் துறை பாரபட்சம் காட்டுகிறதோ என்ற ஐயப்பாடும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தமிழக முதல்வர் கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாள் பெயரையும், ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி பெயரையும் சேர்க்க வேண்டும் என்று கோரி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் பொதுநலன் கருதி ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை டெல்லியை சேர்ந்த பத்திரிக்கையாளர் எம். பர்குவான் தாக்கல் செய்துள்ளார். குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்வதில் கூட மத்திய புலனாய்வு துறை பாரபட்சம் காட்டுகிறது என்று பர்குவான் தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கு விசாரணையை சிறப்பு நீதிபதி ஓ.பி. ஷைனி வரும் 24 ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அரசியல் தரகர் நீரா ராடியா மற்றும் டாடா சன்ஸ் நிறுவன சேர்மன் ரத்தன் டாடா ஆகியோரது பங்கு குறித்து மேல் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி காசியாபாத்தை சேர்ந்த தர்மேந்தர் பாண்டே என்பவர் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு வரும் 24 ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அன்றைய தினமே தயாளு அம்மாளை சேர்க்க வேண்டும் என்று கோரும் மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
தயாளு அம்மாளை இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று கோரியிருக்கும் டாக்டர் முகமது பர்குவான் தான் ஒரு பத்திரிக்கையாளன் என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அனில் அம்பானியை இந்த வழக்கில் சேர்க்காத விஷயத்தில் சி.பி.ஐ. செய்துள்ள குறைபாடுகளையும் பத்திரிக்கையாளர் பர்குவான் சுட்டிக் காட்டியுள்ளார். ரிலையன்ஸ் குழும அதிகாரிகளான கவுதம் தோஷி, சுரேந்திர பிப்பாரா மற்றும் ஹரிநாயர் ஆகியோர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். குற்றப்பத்திரிக்கை தாக்கலான பிறகு இவர்கள் சிறையில் உள்ளனர். இவர்கள் எல்லாம் அந்த கம்பெனியில் ஒரு சாதாரண ஊழியர்கள். அனில் அம்பானிக்கு தெரியாமல் அல்லது அவரது சம்மதம் இல்லாமல் இவர்களால் எந்த குற்றத்தையும் செய்திருக்க முடியாது என்றும் டாக்டர் பர்குவான் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே அனில் அம்பானியையும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்றும் பர்குவான் கோரியுள்ளார்.
ஆனால் சி.பி.ஐ. அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கலைஞர் டி.வியில் தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகள் உள்ளன. அவரது டி.வியின் இயக்குனராவார். ஆனால் குற்றப்பத்திரிக்கையில் இவரது பெயர் விடுபட்டுள்ளது. புலனாய்வு துறை(சி.பி.ஐ.) குற்றவாளிகளை தேர்ந்தெடுக்கிறதோ என்ற சந்தேகம் இதன் மூலம் எழுகிறது என்றும் பர்குவான் தனது மனுவில் கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். தமிழ் மையம் என்ற அமைப்பை பற்றியும் இவர் தனது மனுவில் கூறியுள்ளார். இந்த மையம் கனிமொழி மற்றும் தயாளு அம்மாள் ஆகியோரது கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறியுள்ள அவர், இந்த அமைப்புக்கு பணம் கொடுத்தவர்கள் பட்டியலையும் தனது மனுவுடன் இணைத்துள்ளார். இவ்வாறு பணம் கொடுத்த கம்பெனிகளில் சில, ஸ்பெக்ட்ரம் ஊழலில் உரிமம் பெற்ற கம்பெனிகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்படியிருக்கும் போது தயாளு அம்மாள் பெயர் விடுபட்டிருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது என்றும் அவர் கூறியுள்ளார். எனவே ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாளையும், ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானியையும் சேர்க்க வேண்டும் என்றும் பத்திரிக்கையாளர் பர்குவான் தனது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை வரும் 24 ம் தேதி நடைபெறும் என்று சி.பி.ஐ. நீதிபதி ஷைனி அறிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்