முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.1.86 லட்சம் கோடி ஊழல்: முக்கிய கோப்புகள் மாயம்

ஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.18 - நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் ரூ.1.86 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான 150 முக்கிய கோப்புகள் காணாமல் போய்விட்டன. இந்த பிரச்சனையை எழுப்பி பாராளுமன்றத்தை முடக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.    

பாராளுமன்றத்தில் கம்பெனி மசோதா மட்டுமே நிறைவேறியுள்ளது. உணவு பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட 40 மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டும். இதில் பாதி மசோதாக்களாவது நிறைவேறுமா என்பது சந்தேகமாக உள்ளது. இதற்கிடையே நிலக்கரி மசோதா பெரும் புயலைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2-ஜி அலைக்கற்றை ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் போன்றவற்றில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு நேரடித் தொடர்பு கிடையாது. ஆனால் நிலக்கரி ஊழல் நடைபெற்றபோது அந்தத் துறையை பிரதமர் மண்மோகன்சிங் தான் கவனித்து வந்தார்.

எனவே அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.

பிரதமர் மன்மோகன்சிங் சுதந்திர தின உரையாற்றும்போது, நிலக்கரி அளிப்பு பிரச்சனை காரணமாக மின் உற்பத்தியில் சுணக்கம் ஏற்பட்டது.  இது பெருமளவு தீர்க்கப்பட்டுள்ளது என்றார். இதற்கிடையே நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான 150 கோப்புகள் காணாமல் போய்விட்டன. 1993 முதல் 2005 வரையில் விண்ணப்பித்த மனுக்கள் மாயமாகிவிட்டன. காங்கிரஸ் எம்.பி. விஜய் தார்தா அனுப்பிய பரிந்துரையும், பிரதமர் அலுவலகம் அனுப்பிய கடிதமும் காணாமல் போய்விட்டன. இதனால் மத்திய அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய தணிக்கை கணக்குத் துறை தலைமை அதிகாரி தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சி.பி.ஐ.விசாரணையில் யாரும் தலையிடக் கூடாது என்று நீதிபதிகள் கூறிவிட்டனர். முக்கிய கோப்புகள் அனைத்தையும் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் முக்கிய கோப்புகளை காணவில்லை என்று அரசு இலாகாக்கள் கூறியுள்ளன. எந்தெந்த நிறுவனங்களுக்கு எந்தெந்த விதிமுறைகளின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. எந்த வகையில் மறுக்கப்பட்டது என்பது பற்றிய கோப்புகளும் காணாமல் போய்விட்டன. இந்த கோப்புகளை கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இவை கிடைக்காவிட்டால் மத்திய அரசை சுப்ரீம் கோர்ட் கண்டிக்கும் என்று தெரிகிறது. சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா நில மோசடி விவகாரமும் புயலைக் கிளப்பும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்