முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து கட்சியினருடன் பிரவீண்குமார் திடீர் ஆலோசனை

திங்கட்கிழமை, 9 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.- 9 - வாக்கு எண்ணிக்கை குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நேற்று திடீரென ஆலோசனை நடத்தினார். இதில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட 9 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழக சட்டசபைக்கு கடந்த 13-ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் 91 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை வருகிற 13-ம் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் தேர்தல் அலுவலர்களுக்கு மண்டல வாரியாக பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட 9 அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் அமுதா, ராஜேந்திரன் ஆகியோர் நேற்று திடீரென ஆலோசனை நடத்தினர்.
சென்னை கோட்டையில் பகல் 12 மணிக்கு நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டைன், மைத்ரேயன், மனோஜ்பாண்டியன் எம்.பி., தி.மு.க. சார்பில் அமைச்சர் பொன்முடி, டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., மாநில அமைப்பாளர் கல்யாண சுந்தரம், வக்கீல் ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் சார்பில் மக்பூல்ஜான், சிவலிங்கம், பா.ம.க. சார்பில் ஜி.கே.மணி, வேல்முருகன் எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய அமைச்சர் வேலு, மார்க்சிஸ்ட் சார்பில் மகேந்திரன் எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பழனிச்சாமி, பாரதிய ஜனதா சார்பில் வானதி சீனிவாசன் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து அவர்களுக்கு பிரவீண்குமார் விளக்கி கூறினார். வாக்கு எண்ணிக்கை முறை, வசதிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக்கட்சி பிரதிநிதிகளும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
பின்னர் இந்த கூட்டம் குறித்து பிரவீண்குமார் கூறுகையில், தமிழகத்தில் வாக்குகள் எண்ணும் பணிகளை நேரில் கண்காணிக்க 55 பார்வையாளர்கள் வருகிற 12ம் தேதி தமிழகத்திற்கு வருகிறார்கள். தபால் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்படாவிட்டாலும், மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என தி.மு.க. தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
வாக்குகள் ஒருசுற்று எண்ணி முடிக்கப்பட்டு அதற்கான முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு தான் அடுத்த சுற்று வாக்குகள் எண்ணப்படும் பணி ஆரம்பமாகும். வாக்குகள் எண்ணப்படும் ஒவ்வொரு மேஜையும் வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்படும். இந்த புதிய முறையால் வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படுவதில் சிறிது தாமதம் ஏற்படக்கூடும்.
பத்திரிகை நிருபர்கள், டெலிவிஷன் நிருபர்கள் மற்றும் வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் செல்போனில் பேசுவதற்கென்று தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அங்கே சென்று தான் செல்போன்களை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு பிரவீண் குமார் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்