தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: குர்ஷித்

வெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஆக. 24 - இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார். இந்திய மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்காவிட்டால் அது இந்தியா -இலங்கை உறவில் மனக்கசப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுவரும் தமிழக மீனவர்களின் நிலை குறித்து அதிமுக உறுப்பினர் வா. மைத்ரேயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி. ராஜா ஆகியோர் மாநிலங்களவையில் வியாழக்கிழமை சிறப்பு கவனம் ஈ்ர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசினர். அதற்கு சல்மான் குர்ஷித் அளித்த பதில் வருமாறு:-

இலங்கை சிறைகளில் 106 இந்திய மீனவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மனிதாபிமான அடிப்படையில் அந்நாட்டு அரசு விடுதலை செய்ய வேண்டும். நமது மீனவர்களை இலங்கை அரசு சிறையில் அடைப்பது இந்திய மக்களின் உணர்வுப்பூர்வ, சமூகம் சார்ந்த, அரசியல் ரீதியான பிரச்னையாக உள்ளது. அதனால், இப்பிரச்னைகளுக்குத் தீர்வு காண இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்குத் தீர்வு காணப்படாவிட்டால் அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளும் மேற்கொண்டுவரும் முயற்சிகளில் மனக்கசப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடும்.

இந்திய மீனவர்களின் நலன், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தேர்தல் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பிற நாட்டு மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அங்கே வலியுறுத்தப்பட்டு வருவதால், இந்திய மீனவர்களை விடுவிக்கும் முயற்சியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், இரு நாடுகளின் மீனவர்களின் கூட்டத்தை நடத்தவும் இலங்கை அரசுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. நமது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் இப்பிரச்னையை இலங்கையும் கவனிப்பதால் இப்பிரச்னையின் முக்கியத்துவத்தை அந்நாட்டு அரசும் புரிந்து செயல்படும் என்று எதிர்பார்க்கிறோம். அண்மையில் தில்லி வந்த இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சருடன் பேசியபோதும் இந்திய மீனவர்களை விரைவில் விடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது என்றார் சல்மான் குர்ஷித்.

இதை ஷேர் செய்திடுங்கள்: