முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் ரசாயன ஆயுத தாக்குதல்: விசாரணைக்கு உத்தரவு

வெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

 

பெய்ரூத், ஆக. 24 - அரசுக்கு எதிரான புரட்சிப் படையினர் ஆதிக்கம் செலுத்தும் பகுதியில் ரசாயன ஆயுதத் தாக்குதலை அரசு ஆதரவுப் படையினர் நடத்தவில்லை. அந்தக் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்று சிரியா அரசு மறுத்துள்ளது. எனினும் சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டுப் போரில் ரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ரசாயன ஆயுத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஆய்வு மற்றும் விசாரணை நடத்த ஐநா வல்லுநர் குழுவை அனுப்பி வைக்க அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

சிரியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை கண்காணிக்கவும், நிலைமையை ஆராயவும் ஐநா வல்லுநர் குழு அங்கு ஏற்கெனவே தங்கியுள்ளது. அந்தக் குழுதான் ரசாயன குண்டு வீசப்பட்டதாக சொல்லப்படும் இடத்தில் ஆய்வு நடத்த உள்ளது. கடந்த புதன்கிழமை நடந்த ரசாயன ஆயுத தாக்குதலில் 1,300 பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து எதிர்க் கட்சியினர் மற்றும் சமூக சேவகர்கள் தெரிவிக்கும் புள்ளிவிவரங்களில் அதிக வேறுபாடு காணப்படுகிறது.

கிழக்கு கோவ்தாவில் நடத்தப்பட்ட ரசாயன ஆயுத தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குறித்து சொல்ல வார்த்தைகளே இல்லை என்று, பிரிட்டனைச் சேர்ந்த சிரியா அவதான மற்றும் மனித உரிமைகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. சிரியாவின் போர் விமானங்கள் டமாஸ்கஸ் நகரத்தின் கிழக்கு மற்றும் மேற்குப் புறநகர்ப் பகுதிகளில் பலமுறை பறந்தன என்றும் அது தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டும். அப்படி பாதுகாக்க முடியாதவர்கள், அதற்கு பதில் சொல்லும் பொறுப்புடையவராவார்கள் என்று யுனிசெப் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்