முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துவக்கத்திலேயே விக்கெட் வீழ்ச்சி சேவாக் அணி பரிதாப தோல்வி

திங்கட்கிழமை, 9 மே 2011      விளையாட்டு
Image Unavailable

மும்பை, மே - 9 - மும்பை அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்ததால் தோல்வியை சந்தித்தது.  ஐ.பி.எல். தொடரின் 49-வது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பலம் மிகுந்த மும்பை அணியை, புள்ளிகள் பட்டியலில் மோசமான நிலையில் உள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணி சந்தித்தது. டெல்லி அணி கட்டாய வெற்றியை எதிர்பார்த்து களமிறங்கியது. டாசை வென்ற டெல்லி அணியின் சேவாக் நம்பிக்கையுடன் பீல்டிங்கை தேர்வு செய்தார். மும்பை அணியின் துவக்க வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிலிஸார்டு ஆகியோர் களமிறங்கினர். இதில் பிலிஸார்டு ஆரம்பத்தில் இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சச்சின் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்கள்  இருவரும் 5.2 ஓவர்களில்  முதல் விக்கெட்டிற்கு 50 ரன்களை சேர்த்த நிலையில், சச்சின் டெண்டுல்கர் 14 ரன்கள் எடுத்த நிலையில் இர்பான் பதானின் பந்தில் கிளீன் போல்டானார்.  அடுத்ததாக மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் அம்பதி ராயுடு களமிறங்கினார். அப்போது அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த பிலிஸார்டு 37 ரன்களில் நதீமின் பந்தில் சேவாக்கிடம் பிடிகொடுத்து அவுட்டானார். அப்போது மும்பை அணி 7 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்களை எடுத்திருந்தது. இவரைத் தொடர்ந்து ரோகித் சர்மா, ராயுடுவுடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் டெல்லி பந்துவீச்சாளர்களை கதற வைத்தனர். ராயுடுவும், சர்மாவும் 3 விக்கெட்டிற்கு 33 பந்துகளில் 50 ரன்களை எடுத்தனர். தொடர்ந்து மும்பை ஸ்கோர் 141 ஆக இருந்தபோது ரோகித் சர்மா ரன் குவிக்கும் முயற்சியில் தனது விக்கெட்டை இழந்தார். இவர் 49 ரன்கள் எடுத்த நிலையில் மோர்கலின் பந்துவீச்சில் வேணுகோபால் ராவால் அற்புதமாக கேட்ச் பிடிக்கப்பட்டார். தொடர்ந்து போலார்டு களமிறங்கினார். இந்நிலையில் டெல்லி அணியினரின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. மும்பை அணியின் எண்ணிக்கை 172 க்கு உயர்ந்தபோது அதிரடி வீரர் ராயுடு 59 ரன்கள் எடுத்த நிலையில் ஹோப்ஸின் பந்தில் சேவாக்கால் கேட்ச் பிடிக்கப்பட்டார். இறுதி ஓவரில் மும்பை அணியால் அதிரடியாக ரன் குவிக்க முடியாத வகையில் அகார்கர் கடைசி ஓவரை சிறப்பாக வீச மும்பை அணி  20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை எடுத்தது. போலார்டு 9 ரன்களையும், ஆன்ட்ரூ சைமண்ட்ஸ் 4 ரன்களையும் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி தரப்பில் நதீம், பதான், மோர்கல், ஹோப்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கியது டெல்லி டேர்டெவில்ஸ். அந்த அணியின் துவக்க வீரர்கள் சேவாக் மற்றும் வார்னர் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். டெல்லி அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த மும்பை கேப்டன் சச்சின் துவக்க ஓவரிலேயே சுழல் பந்தை அறிமுகப்படுத்தினார். இந்த முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்தது. ஹர்பஜன் பந்தில் ஆரம்பத்தில் இருந்தே தடுமாறிய டெல்லி வீரர்களில் வார்னர் அந்த ஓவரின் 5 வது பந்தை கால் காப்பில் வாங்கி அவுட்டானார். இதனால் முதல் ஓவரிலேயே அந்த அணி முதல் விக்கெட்டை இழந்தது. அடுத்த வீரராக இங்ராம்  களமிறங்கினார். இரண்டாவது ஓவரை இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய லசித் மலிங்கா வீசினார். முதல் பந்திலேயே இங்ராம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் டெல்லி அணி  2 விக்கெட்டுகளை இழந்து 4 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அடுத்த ஓவரை முனாப் பட்டேலை வீசச் செய்தார் சச்சின். இந்த ஓவரின் முதல் பந்திலேயே அதிரடி வீரர் சேவாக், ரோகித் சர்மாவிடம் பிடிகொடுத்து அவுட்டாக டெல்லி அணியின் வெற்றிக் கனவு தகர்ந்தது. 2.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 4 ரன்களில் தத்தளித்தது டெல்லி டேர்டெவில்ஸ்.  தொடர்ந்து வந்த ஓஜாவும் 1 ரன் எடுத்த நிலையில் முனாப் பட்டேலின் பந்தில் விக்கெட் கீப்பர் ராயுடுவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாக 7 ரன்களுக்குள் 4 வது விக்கெட்டும் பறிபோனது. தொடர்ந்து ஜோடி சேர்ந்த வேணுகோபால் ராவ் மற்றும் ஹோப்ஸ் ஆகியோர் டெல்லி அணிக்கு சிறப்பான பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தினர். இந்த ஜோடி இருக்கும் வரை டெல்லி அணிக்கு நம்பிக்கை உண்டானது. ஆனால் அணியின் ஸ்கோர் 94 ஐ எட்டியபோது வேணுகோபால்ராவ் 27 பந்துகளில் 37 ரன்கள் எடுத்த நிலையில் குல்கர்னியின் பந்தில் கிளீன்போல்டானார். அடுத்து இர்பான் பதான், ஹோப்ஸுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் நல்ல முறையில் அடித்து ஆடியது. இந்நிலையில் 55 ரன்கள் எடுத்திருந்த ஹோப்ஸ் ரன் அவுட்டானார். இதனால் 16.5 ஓவர்களில் 123 ரன்கள் எடுத்திருந்த டெல்லி அணி 6 விக்கெட்டை இழந்தது. அடுத்து வந்த நாகர் ரன் எதுவும் எடுக்காமல் ஹர்பஜன்பந்தில் அவுட்டானார். தொடர்ந்து அகர்கர் களமிறங்கினார். அப்போது 18 பந்துகளில் 23 ரன்களை எடுத்திருந்த பதான், மலிங்காவின் வேகத்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்துவந்த மோர்கெலும், நதீமும், மும்பை ஆல்ரவுண்டர் போலார்டின் பந்தில் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுக்க டெல்லி அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களை மட்டுமே எடுத்தது. அகார்கர் ஆட்டமிழக்காமல் 7 ரன்களை எடுத்திருந்தார். மும்பை தரப்பில் ஹர்பஜன்சிங், மலிங்கா, முனாப்பட்டேல், போலார்டு தலா 2 விக்கெட்டுகளையும், குல்கர்னி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன் காரணமாக டெல்லி அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மும்பை அணியின் அம்பதி ராயுடு ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மும்பை அணி தனது 8 வது வெற்றியை பதிவு செய்து மொத்தம் 16 புள்ளிகளுடன் தொடர்ந்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. டெல்லி அணி தான் விளையாடிய 11 போட்டிகளில் 4 ல் மட்டும் வெற்றிபெற்று 8 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்