40 வழக்குகளில் தொடர்புள்ள துண்டாவுக்கு நீதிமன்ற காவல்

சனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஆக.25 - 40 குண்டுவெடிப்பு வழக்குகளில் தொடர்புள்ள தீவிரவாதி துண்டாவை 14 நாட்கள் வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி டெல்லி கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூர், புனே உள்பட நாட்டில் 40 தடவைகள் குண்டுவெடிக்கப்பட்ட வழக்குகளில் லஷ்கர் இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த அப்துல் கரீம் துண்டாவை போலீசார் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தேடி வந்தனர். கடைசியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்திய-நேபாள எல்லைப்பகுதியில் வைத்து துண்டாவை டெல்லி போலீசார் பிடித்து கைது செய்தனர். துண்டாவை கைது செய்தது டெல்லி போலீசாரின் சிறப்பான பணி என்று கூறப்படுகிறது. 70 வயதாகும் துண்டா போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தார். இந்தநிலையில் துண்டாவுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர் டெல்லியில் உள்ள ஜப்தர்சங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர் ஜப்தர்சங் மருத்துவமனையில் இருந்து டெல்லியில் உள்ள அகில இந்திய விஞ்ஞான கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை டெல்லி கோர்ட்டு மாஜிஸ்திரேட் நேற்று நேரடியாக மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார். அதன் பின்னர் துண்டாவை 14 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். 4 நாட்கள் போலீஸ் காவலில் துண்டா இருந்தார். அந்த 4 நாட்கள் நேற்றுடன் முடிவடைந்ததால் அவர் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட இருந்தார். ஆனால் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி வந்துவிட்டது. துண்டா எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி மும்பையில் நடந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து பாகிஸ்தானில் பதுங்கி உள்ள 20 தீவிரவாதிகளை நாடு கடத்தும்படி அந்த நாட்டை இந்தியா கோரி வருகிறது. அந்த 20 தீவிரவாதிகளில் துண்டாவும் ஒருவர். இந்தியாவில் 40 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் துண்டாவுக்கு தொடர்பு இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் அந்த 20 தீவிரவாதிகளில் கைது செய்யப்பட்டுள்ள முதல் நபர் துண்டாதான். கடந்த 1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த ரயில் குண்டுவெடிப்பு வழக்கிலும் துண்டா தேடப்பட்டு வந்தான். கடந்த 1997-98-ம் ஆண்டில் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திலும் உத்திரப்பிரதேசம், பானிபட், சோனாபட் லூதியானா, ஐதராபாத் ஆகிய நகரங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களிலும் துண்டா தேடப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: