மும்பையில் பலாத்காரம்: 2 பேருக்கு ஆக.30 வரை காவல்

சனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

மும்பை,ஆக.25 - மும்பையில் பெண் பத்திரிகையாளர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 2 பேர் வரும் 30-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மும்பையின் மத்திய பகுதியில் உள்ள ஒரு பாலடைந்த நூற்பாலையில் ஆங்கில பத்திரிகையின் பெண் புகைப்படக்காரரை தூக்கிச்சென்று 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. அந்த பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் 26-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவம் போல் மும்பையிலும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடந்துள்ள இந்த பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு சமூக நல அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள 5 பேர்களின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான அந்த பெண் கூறிய அடையாளத்தின் அடிப்படையில் இந்த வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ள அந்த 5 பேர்களில் 2 பேர்களை போலீசார் கைது செய்துள்ளனர். விஜய் ஜாதவ், சத்தார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். முதலில் சத்தாரையும் பின்னர் நேற்று அதிகாலையில் விஜய் ஜாதவையும் போலீசார் கைது செய்தனர். மும்பை மதன்புராவில் உள்ள வீடியோ கடையில் விஜய் ஜாதவ் இருந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர். இவருடைய வீடு மும்பையில் உள்ள டோம்பிவாலி பகுதியில் இருக்கிறது. இந்த இருவரில் ஒருவரான சத்தார் நேற்றுக்காலையிலும் ஜாதவ் நேற்று மாலையிலும் போய்வதா மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் இருவரையும் வரும் 30-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டார். மேலும் குவாசிம் பெங்காலி, சலீம் அஸ்பாக் ஆகிய மூவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள விஜய் ஜாதவ், பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர். வேலையில்லாதவர். இவருக்கு 2 மூத்த சகோதரர்கள் உள்ளனர். தலைமறைவாகி உள்ளவர்கள் அனைவரும் 18 முதல் 20 வயதுடையவர்கள் என்று தெரியவந்துள்ளது. இவர்களை பிடிக்க 20 தனிப்பிரிவு போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். சத்தார் வீடு, பாலியல் பலாத்காரம் சம்பவம் நடந்த மில்லிற்கு அருகில் உள்ளது. பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ள மற்ற 3 பேரும் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்கள் மட்டுமல்லாது வேலையில்லாமலும் இருக்கின்றனர். இவர்களில் 2 பேர் மீது கொள்ளை வழக்குகளும் உள்ளன. 

இதற்கிடையில் இந்த பாலியல் பலாத்கார வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும் என்றும் பிரபல வழக்கறிஞர் உஜ்வால் நிகமை பெண் பத்திரிகையாளர் சார்பாக ஆஜரப்படுத்த தயார் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: