முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐக்கிய ஆந்திராவை வலியுறுத்தி முற்றுகை- ஸ்தம்பிப்பு

வியாழக்கிழமை, 29 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

நகரி, ஆக. 29 - தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தொடர்ந்து ஐக்கிய ஆந்திராவே நீடிக்க வேண்டும் என்றும் ஆந்திரா மற்றும் ராயல சீமா பகுதியில் கடந்த 1 மாதமாக முழு அடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் போராட்டத்தை தேசிய அளவில் தெரியப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய ஆந்திரா போராட்ட கூட்டு நடவடிக்கை குழுவினர் முடிவு செய்தனர். இதையடுத்து திருப்பதியில் 2 நாள் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. திருப்பதியில் தற்போது தனியார் வாகனங்கள் இயங்குகின்றன.

இந்த போராட்டத்தின் மூலம் எல்லா வாகனங்களையும் தடுத்து நிறுத்துவது, திருப்பதி நகரத்தையே ஸ்தம்பிக்க வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் சால்மன் ஆரோக்கிய ராஜ், போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகர் பாபு ஆகியோர் போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இருந்து வரும் தனியார் வாகனங்களை திருச்சானூர் சர்க்கிள், சொலோ பள்ளி, விலங்கியல் பூங்கா வழியாக திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரிக்கு அனுமதிப்பது என்றும் அங்கிருந்து திருமலைக்கு செல்வார்கள் என்றும் போராட்டக்குழுவினர் தெரிவித்தனர். மற்ற இடங்களில் எல்லாம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.

போராட்டம் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என்றும், தனியார் உணவகங்கள் அனைத்தும் மூடப்பட உள்ளதால் பக்தர்கள் அவதிப்பட நேரிடும் என்றும் தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் அதை மீறி கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஏராளமான பக்தர்கள் 2 நாட்களுக்கு முன்பே திருமலையில் குவிந்தனர். இதற்கிடையே போராட்டக் குழுவினர் அறிவித்தபடி திருப்பதி நகரத்தில் முற்றுகை போராட்டம் நேற்று முன்தினம் நள்ளிரவே தொடங்கியது. இதனால் திருப்பதியில் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், தனியார் வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. பள்ளிகள், கல்லூரிகள் இயங்கவில்லை. அனைத்து ஓட்டல்களும் மூடப்பட்டுள்ளன. அரசு ஊழியர்கள் யாரும் வேலைக்கு செல்லவில்லை. மருத்துவமனைகள், வங்கிகளும் செயல்படவில்லை.

அதையும் மீறி நகருக்குள் நுழைந்த வாகனங்களை போராட்டக்குழுவினர் முற்றுகையிட்டனர். இதனால் திருப்பதி மற்றும் திருமலை முழுவதும் ஸ்தம்பித்தது. திருப்பதியில் நேற்று ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன. வாகன போக்குவரத்து நடை பெறாததால் மணமக்கள் மற்றும் உறவினர்கள் கீழ்திருப்பதியிலேயே தவித்தனர். கிருஷ்ணஜெயந்தி பூஜையில் பங்கேற்ற பக்தர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் திருமலையிலேயே தவித்தனர். 

திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலைக்கு முன்பு தினமும் 1500 பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் நேற்று தேவஸ்தானத்துக்கு சொந்தமான 60 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் பஸ் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.  திருப்பதி ரெயில் நிலையத்தில் இருந்து அலிபிரிக்கு தேவஸ்தானம் சார்பில் 15 பஸ்கள் மட்டும் இயக்கப்படுகிறது. ஓட்டல்கள் மூடப்பட்டு கிடப்பதால் ரெயில்களில் இருந்து வந்து பஸ்களில் ஏறும் பயணிகளுக்கு தேவஸ்தானம் சார்பில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. அதே போல் திருப்பதி விமான நிலையத்தில் இருந்து அலிபிரிக்கு தேவஸ்தானம் சார்பில் ஓரிரு பஸ்கள் மட்டுமே விடப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கடுமையான திண்டாட்டத்திற்கு உள்ளானார்கள்.

குழந்தைகளை ஜன்னல் வழியாக உள்ளே தூக்கி போட்டு பஸ்களில் இடம் பிடித்தனர். திருப்பதி முழுக்க ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளதால் உணவு கிடைக்காமல் திண்டாடினர். அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் நடத்தப்படும் இலவச அன்னதான கூடத்தில் மட்டுமே உணவு வழங்கப்பட்டது. இன்னும் ஏராளமான பக்தர்கள் வீடு திரும்ப முடியாமல் திருமலையிலேயே தவித்த வண்ணம் உள்ளனர். சொந்த வாகனங்களில் செல்வோர் மட்டும் போராட்டக்குழுவினர் அறிவித்த சாலை வழியாக திருமலைக்கு செல்கிறார்கள்.

நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கிய இந்த போராட்டம் இன்று நள்ளிரவு வரை நீடிக்கும் என்பதால் திருப்பதி முற்றிலும் முடங்கி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago