முக்கிய செய்திகள்

நாராயணசாமிக்கு பாரதிய ஜனதா கட்சி கண்டனம்

திங்கட்கிழமை, 9 மே 2011      அரசியல்
Narayanasamy

புதுச்சேரி, மே.10 - புதுவை மாநில பாரதிய ஜனதா தலைவர் தாமோதர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி பாராளுமன்ற பொதுக்கணக்கு குழு தலைவராக இருக்கவே தகுதி இல்லாதவர் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியிருப்பதை பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது. 

முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பாராளுமன்ற பொதுக்கணக்கு குழு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை விசாரணை செய்து தயாரித்த அறிக்கையை பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார் ஏற்றுக் கொண்டு மீண்டும் முரளி மனோகர் ஜோஷியை குழுவின் தலைவராக நியமித்துள்ளார். 

இந்த நிலையில் பாராளுமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் அளித்த அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. குப்பையில் போட வேண்டியது என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கொச்சைப்படுத்தி பேசி அறிக்கையை ஏற்றுக் கொண்ட மக்கள் சபாநாயகரை அவமதித்து இருக்கின்றார். இந்த அவமதிப்பு கண்டத்திற்குரியது. அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற நிலைப்பாடை அவர் எடுத்தால் உடனடியாக மந்திரி பதவியை ராஜினாமா செய்து விட்டு வெளியே வர வேண்டும். 

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடே நடக்கவில்லை. மத்திய மந்திரி ராஜா ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை. பாரதிய ஜனதா கட்சி வீணாக பழி சுமத்துகிறது என்று ராஜா கைதாவதற்கு முன்பு நாராயணசாமி பேசியது அவர் மீது ஏற்கனவே சந்தேகத்தை ஏற்படுத்தியது. 

ஊழல் பணத்தை திரும்பவும் அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக செயல்பட்டு கொண்டிருப்பதை மக்கள் மகிழ்ச்சியோடு பாராட்டுகிறார்கள். அதை பார்த்து பொறுக்க முடியாமல் மத்திய மந்திரி நாராயணசாமி ஆவேசப்படுகிறார். 50 ஆயிரம் கோடி ரூபாய் இந்தியாவின் செல்வத்தை வெளிநட்டுக்கு கடத்திய அசன் அலிக்கு பாஸ்போர்ட் வழங்க பரிந்துரை செய்த கவர்னர் இக்பால்சிங்கின் செயலை நாங்கள் அரசியலாக்கவில்லை. மாறாக புதுவை மாநிலத்திற்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்க அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைப்பது எங்களின் ஜனநாயக கடமை. 

கவர்னரை பற்றி பேச அமைச்சர்களுக்கு அதிகாரம் இல்லை என்று கூறும் மத்திய மந்திரி நாராயணசாமி கவர்னர் தவறு செய்யவில்லை என்று அமைச்சர்கள் சொன்னதை ஏன் கண்டிக்கவில்லை?

அவரும் கவர்னரின் செயலை ஆதரிக்கிறாரா? என்பதை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: