முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெகனுடன் தங்க மனைவிக்கு அனுமதி: சி.பி.ஐ. கோர்ட்டு

திங்கட்கிழமை, 2 செப்டம்பர் 2013      ஊழல்
Image Unavailable

 

நகரி, செப். 2 - சொத்து குவிப்பு வழக்கில் கைதான ஆந்திர மாநில ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஐதராபாத் சஞ்சல்குடா ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.ஆந்திர மாநிலம் பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை கடந்த 24 ம் தேதி தொடங்கினார். அவரது உடல்நிலை மோசம் அடைந்ததை முன்னிட்டு கடந்த 29 ம் தேதி நள்ளிரவு அவர் பலவந்தமாக ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆஸ்பத்திரியிலும் அவர் உண்ணாவிரதத்தை தொடர்ந்ததால் நிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். டாக்டர்கள் அவரது உடல்நிலையை பரிசோதித்தனர். சர்க்கரை அளவும், ரத்த அழுத்தம் மிகவும் குறைந்து காணப்பட்டது. எனவே உண்ணாவிரதத்தை கைவிடும்படி டாக்டர்கள் கேட்டுக் கொண்டனர். அதனை ஏற்க மறுத்த ஜெகன் மோகன் ரெட்டி சிகிச்சைக்கும் ஒத்துழைக்கவில்லை. நேற்று முன்தினம் 7வது நாளாக அவரது உண்ணாவிரதம் நீடித்தது.

இதே நிலை நீடித்தால் அவரது சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்படக்கூடும் என்று கவலை கொண்ட டாக்டர்கள் ஜெகனுக்கு பலவந்தமாக சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கும்படி சஞ்சல்குடா ஜெயில் சூப்பிரண்டுக்கு கடிதம் அனுப்பினர். ஜெயில் சூப்பிரண்டு அனுமதி அளித்ததின் பேரில் நேற்று முன்தினம் அவருக்கு டாக்டர்கள் வலுக்கட்டாயமாக சிகிச்சை அளித்தனர். முதலில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டதுடன் மேல் சிகிச்சையும் தொடரப்பட்டது. ஆஸ்பத்திரியில் ஜெகன் மோகன் ரெட்டியை பார்க்க அவரது தாயார் விஜயலட்சுமி, மனைவி பாரதிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதை எதிர்த்து மனைவி பாரதி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு செய்தார். ஜெகனின் உடல்நிலை மோசமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு எங்கள் உதவி தேவைப்படுகிறது. எனவே அதற்கு அனுமதி அளிக்கும்படி மனுவில் கூறியிருந்தனர். இதற்கு சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் சி.பி.ஐ. வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி துர்கா, பிரசாத் ராவ், ஜெகனுடன் தங்க அவரது மனைவி பாரதிக்கு அனுமதி அளித்து தீர்ப்பு கூறினர். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை அவர் கணவருடன் தங்கலாம் என்றும் மருத்துவர்கள் மேற்பார்வையிலேயே மருந்துகளும், சிகிச்சையும் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்