முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

9 ஆந்திர தெலுங்குதேசம் - காங்., எம்.பி.க்கள் சஸ்பெண்டு

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, செப். 3 - தனித் தெலுங்கானா மாநிலத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், ஒன்றுபட்ட ஆந்திரா கோரியும் பாராளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்ட 4 தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்களும், 5 காங்கிரஸ் எம்.பி.க்களும் ஆக மொத்தம் 9 ஆந்திர எம்.பி.க்களை சபாநாயகர் மீராகுமார் நேற்று மீண்டும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இவர்கள் மீதியுள்ள 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவது இந்த கூட்டத் தொடரில் இது 2 வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆந்திர மாநிலத்தை 2 ஆக பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து விட்டது. இதற்கான அறிவிப்பு பாராளுமன்ற கூட்டத் தொடர் முடிந்த பிறகு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆனால் தெலுங்கானா மாநிலம் அமைவதற்கு ஆந்திர மாநிலத்தில் உள்ள கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் இந்த பகுதிகளை சேர்ந்த அரசு ஊழியர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் ஆந்திராவில் நிர்வாகமே தற்போது ஸ்தம்பித்துப் போய் கிடக்கிறது. 

இந்த நிலையில் பாராளுமன்றம் நேற்று 2 நாள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் கூடியது. லோக்சபை கூடியதும் தெலுங்கு தேசம் எம்.பி.க்களான என். கிரிஷ்டப்பா, வேணுகோபால்ரெட்டி, கே.என். ராவ் மற்றும் சிவபிரசாத் ஆகியோர் சபையின் மையப் பகுதிக்கு சென்று தெலுங்கானா அமைவதற்கு எதிராக தங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இவர்களில் ஒருவரான சிவபிரசாத் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் முகமுடியை எடுத்து அணிந்து கொண்டு ஒன்றுபட்ட ஆந்திராவுக்கு ஆதரவாகவும், தெலுங்கானாவுக்கு எதிராகவும் கோஷமிட்டார். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது. 

இதே போல ஆந்திராவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்களான சாய் பிரதாப், அனந்த வெங்கட்ராமி ரெட்டி, ராஜகோபால், மகுந்தா ஸ்ரீநிவாசலு ரெட்டி மற்றும் பாபிராஜூ ஆகியோர் சபையின் மையப் பகுதிக்கு சென்று கையில் பதாகைகளை ஏந்திக் கொண்டு நாங்கள் ஒன்றுபட்ட ஆந்திராவையே விரும்புகிறோம் என்று உரத்த குரலில் கோஷமிட்டனர். எங்களுக்கு நீதி வேண்டும் என்றும் இவர்கள் கோஷமிட்டனர். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது. 

சிவபிரசாத் முகமுடி அணிந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சில காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் தெலுங்குதேசம் எம்.பி.க்களுக்கும், காங்கிரஸ் எம்.பி.க்களும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சபாநாயகர் மீராகுமார் தனது பிரத்யேக அதிகாரத்தை பயன்படுத்தி அமளியில் ஈடுபட்ட மேற்கண்ட 9 எம்.பி.க்களையும் 374- ஏ விதியின் கீழ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து இந்த மழைக்கால கூட்டத் தொடரின் மீதியுள்ள 5 நாட்களுக்கு இவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதால் இவர்கள் சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள இயலாது. இவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகு சபையை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைத்து உத்தரவிட்டார் சபாநாயகர் மீராகுமார். 

ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் 23 ம் தேதி 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அந்த 12 பேரில் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட 9 எம்.பி.க்களும் அடங்குவர். ஆக, ஒரே கூட்டத் தொடரில் 2 வது முறையாக எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த அதிரடி நடவடிக்கையை சபாநாயகர் மீராகுமார் எடுத்துள்ளார். ஏற்கனவே இது போன்ற நடவடிக்கையை எடுத்த போது மனமில்லாமல் தான் அந்த முடிவை எடுத்ததாக சபாநாயகர் கூறியிருந்தார். மேலும் பாதுகாப்பு கருதியும் அவ்வாறு செய்ததாக அவர் கூறியிருந்தார். காரணம் சபைக்குள் ஆபத்தான பொருட்களை இவர்கள் கொண்டு வரக் கூடும் என்ற தகவல் கிடைத்ததையடுத்து சபாநாயகர் இந்த நடவடிக்கையை எடுத்ததாகவும் செய்திகள் வெளியாயின. இந்த சூழ்நிலையில்தான் நேற்று மீண்டும் 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்