முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவி மீது ஆசிட் வீச்சு

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

திருப்பதி,செப்.4 - ஆந்திராவில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசப்பட்டது. இதுதொடர்பாக வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் முதிகுப்பா பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஷீலா (பெயர் மாற்றம்). தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பைனான்ஸ் உரிமையாளர் ராகவா (30) என்பவர் ஷீலாவிடம் காதலிப்பதாக கூறினார். அவரது காதலை ஏற்க ஷீலா மறுத்து விட்டார். இருப்பினும் ராகவா, ஷீலாவை தினமும் பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்தார். இதனால் கடந்த ஒரு மாதத்துக்கு முன் முதிகுப்பா காவல் நிலையத்தில் ஷீலா புகார் செய்தார். இதையடுத்து ராகவாவிடம் விசாரணை நடத்திய போலீசார், மாணவியை தொந்தரவு செய்யக் கூடாது என எச்சரித்து அனுப்பினர்.

அதன் பிறகும் ராகவா திருந்தவில்லை. கடந்த 3 நாளாக மாணவியை பின் தொடர்ந்து டார்ச்சர் செய்தார். ஆனால் ஷீலா திட்டவட்டமாக மறுத்ததால், ராகவா கடும் ஆத்திரமடைந்தார். நேற்று பிற்பகல் பெல்லாரி சாலையில் வந்த ஷீலா மீது ஆசிட்டை வீசி விட்டு பைக்கில் தப்பினார். முகம் மற்றும் உடல் பகுதியில் ஆசிட் சிதறியதால் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு முதிகுப்பா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அனந்தபூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய ராகவாவை நேற்றிரவு பிடித்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்