முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரசாயன ஆயுத பிரயோகம்: ஆதாரம் வெளியிட்டது பிரான்ஸ்

புதன்கிழமை, 4 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

பாரிஸ், செப். 4 - கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து சிரியாவில் அரசுப்படைகள் 3 முறை ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதற்கான அசைக்க முடியாத ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. 

ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொன்று குவித்ததாக சிரியா அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ரசாயன தாக்குதல் நடந்ததாக கூறப்படும் இடங்களில் இருந்து தடய மாதிரிகளை சேகரித்த ஐ.நா. சபை அதிகாரிகள் அவற்றை ஆய்வகங்களில் பரிசோதித்து வருகின்றனர். 

இந்த நிலையில் சிரியா அரசின் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள அமெரிக்கா தயாராகி வருகிறது. அமெரிக்காவின் ராணுவ தாக்குதலில் பங்கேற்பது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கொண்டு வந்த தீர்மானம் பாராளுமன்றத்தில் தோல்வியடைந்த நிலையில் சிரியா மீதான தாக்குதலில் இங்கிலாந்து பங்கேற்காது என்று அவர் அறிவித்தார்.

அமெரிக்காவுக்கு ராணுவ ரீதியாக இல்லாமல் தார்மீக ஒத்துழைப்பு வழங்க தயார் என ஆஸ்திரேலியா அறிவித்தது. இங்கிலாந்து ஒத்துழைப்பு இல்லாவிட்டாலும் சிரியா மீதான அமெரிக்க தாக்குதலில் எங்கள் நாடும் பங்கேற்கும் என பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டே ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து சிரியாவில் அரசுப்படைகள் 3 முறை ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதற்கான அசைக்க முடியாத ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக பிரான்ஸ் பாராளுமன்றத்தில் பிரதமர் ஜேன் மார்க் அய்ரால்ட் நேற்று அறிக்கை சமர்ப்பித்துள்ளார். சிரியா ராணுவத்திடம் ஆயிரக்கணக்கான டன்கள் எடை கொண்ட ரசாயன ஆயுதங்கள் உள்ளதாகவும், இதுவரை குறைந்தபட்சம் 3 முறை இந்த ஆயுதங்களை பயன்டுத்தி அப்பாவி மக்களை ராணுவம் கொன்று குவித்ததற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் பிரான்ஸ் உளவுத்துறையின் தகவல்களை அடிப்படையாக கொண்ட 9 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த கொடூர தாக்குதலில் ்ஈடுபட்ட சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை தண்டித்தே தீர வேண்டும் என பிரான்ஸ் அரசு கருதுவதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது

சிரியா மீதான அமெரிக்க தாக்குதலில் பிரான்ஸ் பங்கேற்கும் என்ற அதிபரின் அறிவிப்பு மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என பிரான்ஸ் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூறி வருகின்றனர். ஆனால், வாக்கெடுப்பும் விவாதமும் தேவையற்றது என்று பிரதமர் மறுத்து வந்தார். எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தலுக்கிணங்க புதன்கிழமை பிரான்ஸ் பாராளுமன்றத்தில் சிரியா மீது தாக்குதல் நடத்துவதா? வேண்டாமா? என வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

பிரான்ஸ் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின்படி, எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்துவது தொடர்பாக ராணுவத்தின் தலைவராகவும் உள்ள அதிபர் சுயமாக முடிவெடுக்கலாம். ஆனால், இந்த தாக்குதலுக்கு 3 நாட்கள் முன்னதாக பாராளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும். அதே தாக்குதல் 4 மாதங்களுக்கு மேல் நீடிக்கக்கூடிய நிலையில் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி எம்.பி.க்களின் ஆதரவை பெற வேண்டும். அதிபரின் முடிவு வாக்கெடுப்பின் போது தோற்கடிக்கப்பட்டால், தாக்குதல் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்