முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியா மீது ராணுவ நடவடிக்கை: பிரதமர் எதிர்ப்பு

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2013      அரசியல்
Image Unavailable

 

செயின்ட்பீட்டர்ஸ்பர்க்,செப்.7 - சிரியா மீதான ராணுவ தாக்குதலுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஐ.நா.வின் ஒப்புதல் பெற்ற பிறகே எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மன்மோகன்சிங் ஜி - 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்யா சென்றுள்ளார். அங்கு செயின்ட் பீட்டர்ஸ் பெர்க் நகரில் நடந்து வரும் உச்சி மாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டு அதில் ஆயிரக்கணக்கானோர் பலியானதற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டார். அதே நேரம் சிரியா மீதான ராணுவ தாக்குதலுக்கு பிரதமர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எந்தவொரு நடவடிக்கையும் ஐ.நா.வின் ஒப்புதல் பெற்ற பிறகே எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். முன்னதாக தலைவர்களுக்கான விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய அலுவாலியா தெரிவித்தார். ஐ.நா. பார்வையாளர்கள் சிரியாவுக்கு சென்றுள்ளனர். அவர்களது அறிக்கை வரும் வரை காத்திருக்க வேண்டும். அதன் பிறகுதான் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியதாக அலுவாலியா தெரிவித்தார். இதே போல் சிரியா மீது ராணுவ நடவடிக்கை கூடாது என்று ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினும் ஏற்கனவே எச்சரித்திருந்தார். சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதை நிரூபிக்க வேண்டும். யார் பயன்படுத்தினார்கள். எப்படி பயன்படுத்தினார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு ஐ.நா.வின் ஒப்புதல் பெற்ற பிறகே எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று கூறியிருந்த புதின், சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது நிரூபிக்கப்பட்டால் நாங்களே நடவடிக்கை எடுப்போம் என்றும் புதின் கூறியிருந்தார். இந்த நிலையில் சில நிபந்தனைகளுடன் சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. ஐ.நா.வின் ஒப்புதலும் கிடைத்து விட்டால் அமெரிக்கா சிரியாவை தாக்குவது கிட்டத்தட்ட உறுதியாகி விடும். 

இதனிடையே இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கீமூன், ஐ.நா. பார்வையாளர்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளை மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்களிடம் விளக்கி கூறினார். எனவே ஐ.நா. குழு விரைவில் தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா, சிரியா அதிபர் ஆசாத் மீது குற்றம் சாட்டியுள்ளார். டமாஸ்கஸ் நகரில் விஷ வாயு மூலம் தாக்குதல் நடத்தி 1,429 பேரை அதிபர் ஆசாத்தின் படைகள் கொன்று விட்டதாக ஒபாமா குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் அதிபர் ஆசாத்தோ போராளிகளை இந்த தாக்குதலுக்காக குற்றம் சாட்டியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்