முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி: ஜே.பி.சி. கூட்டம் திடீர் ஒத்திவைப்பு

சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, செப். 22 - 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் விலை நிர்ணயம் தொடர்பாக நாளை 23 ம் தேதி நடக்கவிருந்த ஜே.பி.சி. நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டம் திடீரென்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக அதன் தலைவர் பி.சி. சாக்கோ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். 

வரும் 25 ம் தேதி சில உறுப்பினர்கள் வேறு அலுவலில் இருப்பதாலும், அன்றைய தினம் டெலலியில் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம் நடைபெறவிருப்பதாலும் ஜே.பி.சி. கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என்று அந்த செய்தி குறிப்பில் அவர் கூறியுள்ளார். ஆனால் தேதி குறிப்பிடாமல் சாக்கோ ஒத்தி வைத்துள்ள கூட்டம் தொடர்பான அறிவிப்பு தி.மு.க. கொடுத்துள்ள நெருக்குதலும் காரணமாக இருக்கலாம் என்று டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

அலைக்கற்றை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவை ஜே.பி.சி முன் ஆஜராக சம்மன் அனுப்ப வேண்டும் என்று அதன் சில உறுப்பினர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இதன் விளைவாக கடந்த பிப்ரவரி மாதத்துக்கு பிறகு ஜே.பி.சி. கூட்டம் நடைபெறவில்லை. அதை தொடர்ந்து குழுவில் உள்ள எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களுக்கு சாக்கோவுடன் கருத்து வேறுபாடு எழுந்தது. பின்னர் மக்களவை தலைவர் மீராகுமார் தலையிட்டு பிரச்சினையை சுமூகமாக தீர்த்து கொள்ளும் படி அறிவுறுத்தினார். 

இதையடுத்து ராசா அனுப்பி இருந்த கடிதங்கள் ஜே.பி.சி. இறுதி அறிக்கையில் பதிவு செய்யப்படும் என்று சாக்கோ அறிவித்தார். அதை தொடர்ந்து வரைவு அறிக்கையை தயாரித்து அதை நிறைவேற்றுவதற்காக வரும் திங்கட் கிழமை ஜே.பி.சி. கூட்டத்தை கூட்டியுள்ளதாக உறுப்பினர்களுக்கு அவர் அழைப்பு கடிதம் அனுப்பினார். அத்துடன் ராசா அனுப்பிய கடிதங்களின் நகல்களையும் சாக்கோ இணைத்திருந்தார். 

இதையடுத்து ராசாவின் கடிதத்தில் உள்ள விவரங்கள் மீது உறுப்பினர்கள் எழுப்பும் சந்தேகத்துக்கு சாக்கோவும் சம்பந்தப்பட்டவர்களும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங், மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் பதில் அளிக்க வேண்டும் என்று பா.ஜ.க மூத்த உறுப்பினர் யஷ்வந்த்சின்ஹா இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் குருதாஸ் தாஸ் குப்தா, சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்