முக்கிய செய்திகள்

பின்லேடன் மனைவிகளிடம் விசாரிக்க அமெரிக்கா அனுமதி கோரவில்லை

புதன்கிழமை, 11 மே 2011      உலகம்
US-Pak-Flag 0

 

இஸ்லாமாபாத், மே.12 - கடந்த 2ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடன் மனைவிகளை பாகிஸ்தான் அரசு கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் அவர்களிடம் அமெரிக்கா விசாரணை நடத்த பாகிஸ்தான் அனுமதி அளித்துவிட்டது என்ற தகவலை பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது. 

அபோதாபாத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட பின்லேடனின் மனைவிகளை பாகிஸ்தான் அரசு கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் அவர்களிடம் அமெரிக்கா விசாரணை நடத்துவது என முடிவு செய்துள்ளது. இதன்மூலம் தீவிரவாத நடவடிக்கைகள் மற்றும் அல்கொய்தா இயக்கம் பற்றிய தகவல்களை அறிய முடியும் என கருதி அவர்களிடம் விசாரணை நடத்த பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது என்ற தகவலும் வெளியானது. இதனை பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுதுறை செயலாளர் சல்மான் பஷீர் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில், பின்லேடனின் மனைவிகளிடம் விசாரணை நடத்துவது குறித்தோ ஒப்படைப்பது குறித்தோ அமெரிக்கா முறைப்படி பாகிஸ்தானை அணுகவில்லை என்று தெரிவித்தார். 

ஆனால் அமெரிக்க அதிகாரிகளோ இதற்கு நேர்மாறான கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பென்டகன் ராணுவ தலைமையகத்தில் செய்தி தொடர்பாளர் டேவ்லபான், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் பின்லேடன் மனைவிகள் குறித்து விசாரணை நடத்துவது குறித்த தகவல்களை மறுக்கவோ, ஏற்றுக்கொள்ளவோ இல்லை. இதுகுறித்து பாகிஸ்தான் அரசுடன் பேசிவருகிறோம். ஆனால் அங்கிருந்து திட்டவட்டமான பதில்  இன்னும் வரவில்லை. அதே நேரத்தில் பாகிஸ்தான் மற்றும் உலகின் எந்த பகுதியலும் தீவிரவாதம் நடந்தாலும் அதனை ஒழிப்பதில் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம் என்றும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: