முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை தேர்தலில் த.தே.கூ. வெற்றி: தலைவர்கள் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 23 - ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இலங்கையில் நடைபெற்ற மாகாண சபை தேர்தல்களில், வடக்கு மாகாணத் தேர்தலில் மொத்தம் உள்ள 36 தொகுதிகளில், 28 இடங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று இருக்கிறது.

ராஜபக்சே கட்சியும், துரோகக் கட்சிகளும் இணைந்து ஏற்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி படுதோல்வி அடைந்துள்ளது.

வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாணத்தில் 4 இடங்கள், முல்லைத் தீவில் 4 இடங்கள், வவுனியாவில் 4 இடங்கள், கிளிநொச்சியில் 3 இடங்கள், மன்னாரில் 3 இடங்கள் ஆக 28 தொகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.

தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன் கொலை செய்யும் நோக்கோடு ராணுவ உதவியுடன் வன்முறைக் குண்டர்களின் தாக்குதலுக்கு ஆளான ஆனந்தி சசிதரன் தேர்தல் முடிவு இதுவரை அறிவிக்கப்படவில்லை.

தந்தை செல்வா காலத்தில் சிங்கள அரசு அறிவித்த மாகாணக் கவுன்சில் அதிகாரங்களோ, அதிபர் ஜெயவர்த்தனா காலத்தில் மீண்டும் அறிவிக்கப்பட்ட மாவட்டக் கவுன்சில் அதிகாரங்களோ கூட இப்போது மாகாண சபைகள் மூலம் கிடைக்காது.

வடக்கு மாகாணத்தில் தமிழர்களின் மறுவாழ்வுக்கு சிங்கள அரசு செயல்படுவதாக ராஜபக்சே செய்த பொய்ப் பிரச்சாரத்தையும் ராணுவம், போலீஸ் மற்றும் வன்முறையாளர்களைக் கொண்டு ஏவிய அடக்குமுறை அச்சுறுத்தலையும் மீறி ஈழத் தமிழர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கிய வாக்குகள், சிங்கள அரசின் அராஜாக அரசுக்கு எதிரான வாக்குகளே ஆகும்.

அயர்லாந்து விடுதலைப் போராட்டத்தில் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அரசருக்கு விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொண்டு, தேர்தலில் வெற்றி பெற்று, பின்னர் சரியான சந்தர்ப்பத்தில் சுதந்திர அயர்லாந்தை டிவேலாராவும் சின்பென் இயக்கமும் பிரகடனம் செய்ததுபோல, அத்தகைய வரலாறு தமிழ் ஈழத்திலும் மீண்டும் திரும்பும் என்பதுதான் காலத்தின் தீர்ப்பாக இருக்கும்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இலங்கைப் போரில் ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்ததுடன், நான்கு லட்சம் தமிழர்களை அகதிகள் என்ற பெயரில் ஆடு மாடுகளைப் போல கொட்டடியில் அடைத்து வைத்து சிங்கள அரசு கொடுமைப்படுத்தியது. போருக்குப் பிறகும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தன. வடக்கு மாநிலம் முழுவதும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.

ஜனநாயகத்தில் தமக்கு நம்பிக்கை உள்ளது என்ற மாயத் தோற்றத்தை உலக நாடுகளுக்கு ஏற்படுத்து வதற்காகவும் இந்தத் தேர்தலை இராஜபக்சே அரசு நடத்தியது.

தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய நாளில் இருந்தே அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இந்த அடக்குமுறைகளை எல்லாம் தாண்டி தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது.

ராஜபக்சே கட்சியால் வெறும் 7 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்திருக்கிறது. ஒட்டு மொத்தமாக பதிவான சுமார் 5 லட்சம் வாக்குகளில் 80 சதவீதம் வாக்குகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுள்ளது. இந்தத் தேர்தல் வெற்றிக்காக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் அது தமிழீழக் கோரிக்கைக்கு வலு சேர்த்து விடும் என்பதால், அக் கூட்டமைப்பை முறியடிக்க வேண்டும் என இராஜபக்சே கட்சி பிரச்சாரம் செய்தது. ஆனால், இராசபக்சே கட்சிக்கு படுதோல்வியை பரிசாக கொடுத்திருப்பதன் மூலம் இலங்கை பிரச்சினைக்கு தமிழீழமே தீர்வு என்பதை ஈழத் தமிழர்கள் மீண்டும் உறுதி செய்துள்ளனர்.

எனவே, இலங்கை வடக்கு மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்க விருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பும், முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஈழ மக்களின் உணர்வுகளை மதித்து செயல்பட வேண்டும்.

தேர்தல் முடிவு தமிழீழ கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி என்பதால், ஈழத் தமிழர்களின் இந்த விருப்பத்தை ஐ.நா. மூலம் நிறைவேற்ற இந்தியாவும், உலக நாடுகளும் முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இலங்கை வடக்கு மாகாணத்தில் ஆட்சியமைக்கவிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கும் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தத் தேர்தல் சர்வதேச நிர்ப்பந்தங்களின் காரணமாகவே நடத்தப்பட்டது. தேர்தலை அறிவித்தாலும் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதைத் தடுக்கும் விதமாகப் பல்வேறு இடையூறுகளை இலங்கை அரசு செய்துவந்தது.

அங்கு தமிழ் மக்கள் தமது கருத்து என்ன என்பதை மிகத் தெளிவாகத் தெரிவித்துவிட்டனர். சிங்கள அரசின் அடக்கு முறைகளுக்குப் பணியமாட்டோம் எனத் துணிச்சலோடு அறிவித்துவிட்டனர்.

ஈழத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கிறார்கள் என்பதை இந்தத் தேர்தல் மூலம் அவர்கள் வெளிப்படுத்திவிட்டனர். முஸ்லிம் அமைப்புகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈழத் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என அறிக்கை விடுத்த ஒரே தமிழக அரசியல் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மட்டும் தான். இனியும் கூட அதே தொலைநோக்கோடுதான் இந்தப் பிரச்சனையை விடுதலைச் சிறுத்தைகள் அணுகும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்