முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை வ.மாகாண தேர்தல்: விக்னேஸ்வரன் முதல்வராகிறார்

ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, செப். 23 - இலங்கை வடக்கு மாகாண தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றது. கூட்டமைப்பின் தலைவர் விக்னேஸ்வரன் முதல்வராகிறார். 

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். கடைசியாக இங்கு 1988 ல் தேர்தல் நடந்தது. அப்போது விடுதலைப் புலிகள் பெரும்பாலான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததால் ஒரே ஒரு அரசியல் கட்சி மட்டுமே அப்போதைய தேர்தலில் கலந்து கொண்டது. அதன் பிறகு தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில் கடந்த 2009 ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பை முழுமையாக இலங்கை ராணுவம் ஒழித்தது. அதன் பிறகு வடக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்தன. 

தன் மீதான குற்றச்சாட்டுகளை பின் தள்ளவும், வடக்கு மாகாண தேர்தலை நடத்தி சர்வதேச அரங்கில் தன் மீதுள்ள களங்கத்தை துடைப்பதற்காக தேர்தலை நடத்த அதிபர் ராஜபக்சே முடிவு செய்தார். அதன்படி வடக்கு மாகாணத்தில் நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இங்குள்ள 36 இடங்களுக்கு 906 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாகாண சபைகளுக்கு 142 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களை தேர்வு செய்ய 43 லட்சம் பேர் உள்ளனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தேர்தல் நடைபெற்றது. 

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் வளைகுடா, முல்லைத் தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் 850 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். மொத்தம் 65 சதவீதம் வாக்குப் பதிவானது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முதல்வர் வேட்பாளராக முன்னாள் நீதிபதி விக்னேஸ்வரன் போட்டியிட்டார். இந்த கட்சிக்கு வீடு சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் நேரடி போட்டி நடந்தது. 

தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் மாலை முதலே எண்ணப்பட்டன. இதில் யாழ்ப்பாணத்தில் 14 இடங்களிலும், முல்லைத் தீவில் 4 இடங்களிலும், கிளிநொச்சியில் 3 இடங்களிலும், மன்னாரில் 3 இடங்களிலும், வவுனியாவில் 4 இடங்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 36 இடங்களில் 28 ல் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றது. இதனால் மூன்றில் இரண்டு பங்கு தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தகுதி பெற்றது. ராஜபக்சேவின் கட்சி 7 இடங்களில்தான் வெற்றி பெற்றுள்ளது. 

தவிர இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தை கைப்பற்றி உள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி அடைந்ததையடுத்து முன்னாள் நீதிபதி சி.வி. விக்னேஸ்வரன் முதல்வராகிறார். இவர் கடந்த 1939 ம் ஆண்டு அக்டோபர் 23 ம் தேதி கொழும்பில் பிறந்தவர். சட்டம் பயின்று நீதித்துறையில் பணியாற்றினார். ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டு பின்னர் 2001 ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதியானார். 2004 ம் ஆண்டு இவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவரது தந்தை கனகசபாபதியும் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்