முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்நடை தீவன ஊழல்: லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறை

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2013      அரசியல்
Image Unavailable

 

ராஞ்சி,அக்.4 - கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராஞ்சி சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதனையொட்டி ராஞ்சியில் உள்ள மத்திய சிறையில் லாலு அடைக்கப்பட்டார். தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அவர் முடிவு செய்துள்ளார்.

ஏறக்குறைய கடந்த17 ஆண்டுகளுக்கு முன்பு பிரிக்கப்படாத பீகார் மாநிலத்தின் முதல்வராக ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது கால்நடைகளுக்கு தீவனம் கொள்முதல் செய்ததில் ரூ. 950 கோடிக்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டது. இதனையொட்டி அவர் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக அவரது மனைவி ராப்ரி தேவி முதல்வராக பதவி ஏற்றார். லாலு மீது கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு ராஞ்சி சி.பி.ஐ. கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு மத்திய ரயில்வே அமைச்சராக லாலு பதவி வகித்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த17 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. கடந்த பல நாட்களுக்கு முன்பு விசாரணை முடிந்து ராஞ்சி சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அப்போது கால்நடை தீவன ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத் யாதவ் மற்றும் ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர் உள்பட45 பேர் குற்றவாளிகள் என்று கோர்ட்டு அறிவித்தது. ஆனால் அவர்களுக்கு தண்டனை விபரம் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில் லாலு பிரசாத் யாதவ் உள்பட45 பேருக்கு நேற்று தண்டனை விபரத்தை ராஞ்சி சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி பி.கே. சிங் அறிவித்தார். தீர்ப்பில் லாலு பிரசாத் யாதவுக்கு5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.2 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.  கால்நடை தீவன ஊழல் வழக்கு பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் அரசு கஜானாவில் ரூ.37.30 கோடி ரூபாய் எடுக்கப்பட்டதற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேலும் பல பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

லாலுவுக்கு5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.2 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதன் மூலம் அவர் லோக்சபை எம்.பி. பதவியை இழந்துவிட்டார். மேலும் நீதிபதி தீர்ப்பு வழங்கியவுடன் ராஞ்சிக்கு வெளியே உள்ள பீர்ஷா முண்டா மத்திய சிறையில் லாலு அடைக்கப்பட்டார். இந்த தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அவரது கட்சியான ராஷ்ட்ரீய ஜனதாதளம் முடிவு செய்துள்ளது. இந்த தண்டனை வழங்கப்பட்டிருப்பதால் லாலு பிரசாத் இனிமேல்11 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. எம்.எல்.ஏ.வாக இருந்தால்5 ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாது. தண்டனை பெறும் அரசியல்வாதிகளை காப்பாற்றும் வகையில் மத்திய அரசின் சிபாரிசு பேரில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த அவசர சட்டம் ரத்து செய்யப்பட்டது. அவசர சட்டம் ரத்து செய்யப்படாமல் இருந்திருந்தால் லாலு பிரசாத் யாதவின் எம்.பி. பதவி தப்புவதோடு வருங்காலத்தில் தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த வாய்ப்பு போய்விட்டது. அதே சமயத்தில் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பில் தண்டனை பெறும் எம்.பி.கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அதாவது தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்து இடைக்கால தடை பெற்றால் தேர்தலில் போட்டியிட முடியும். அதனால் லாலுவுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்ய அவரது கட்சி முடிவு செய்திருக்கிறது. அதனால் அப்பீல் மூலம் இடைக்கால தடை கிடைக்கவும் லாலுவுக்கு வாய்ப்பு ள்ளது. அதே சமயத்தில் லாலுவுக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதாவது பீகார் மாநிலத்தில் காங்கிரஸ்__ராஷ்ட்ரீய ஜனதாதளம் இடையே கூட்டணி ஏற்பட வாய்ப்பு இல்லை. அதேசமயத்தில் காங்கிரஸ்_ஐக்கிய ஜனதாதளம் சார்பாக கூட்டணி ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த வழக்கில் பீகார் மாநில மற்றொரு முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ராவுக்கு4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று தீர்ப்பின்போது ஆஜராகாத3 பேருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தண்டனையை நீதிபதி அறிவித்தபோது தண்டனையை குறையுங்கள் என்று நீதிபதியை பார்த்து லாலு பிரசாத் யாதவ் கெஞ்சினார். நான் பீகார் மாநிலத்தின் இரண்டு முறை முதல்வராக இருந்திருக்கிறேன். மத்திய ரயில்வே அமைச்சராகவும் பதவி வகித்துள்ளேன். அதனால் எனக்கு வழங்கப்பட்டுள்ள தண்ட+னையை குறையுங்கள் என்று கெஞ்சினார். ஆனால் தண்டனையை நீதிபதி குறைத்ததாக தெரியவில்லை. கடந்த3 நாட்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்யசபை எம்.பி. ரஷீத் மசூத்திற்கு அடுத்து லாலு எம்.பி. பதவியை இழந்துள்ளார்.

தண்டனை பெறும் அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தண்டனை பெற்றால் அவர்களின் பதவி தண்டனை அறிவிக்கப்பட்ட நாளே பறிபோய்விடும் என்றும் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்ப்பானது இந்திய சுதந்திர வரலாற்றின் பொன்னேட்டில் பதிக்கப்பட வேண்டியவையாகும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்