முக்கிய செய்திகள்

உ.பி.யில் காங். தலைவர்கள் மீது தடியடி

வெள்ளிக்கிழமை, 13 மே 2011      அரசியல்
Rahul Arrest

லக்னோ,மே.13 - ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதோடு அவர்களை கைதும் செய்தனர்.  உத்திரப்பிரதேச மாநிலத்தில் யமுனா எக்ஸ்பிரஸ் சாலை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு கூடுதல் இழப்பீடு கோரி கிரேட் நொய்டா பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி நேற்றுமுன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து உத்திரப்பிரதேச மாநிலம் முழுவதும் நேற்று காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் லக்னோவில் மாநில தலைவர் ரீடா பகுகுணா ஜோஷி தலைமையில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதித்ததால் அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கேட்டுக்கொண்டனர். அவர்கள் கலைந்து செல்லாததால் கூட்டத்தினரை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதாக தெரிகிறது. அப்போது ஜோஷி மீதும் தடியடி நடத்தப்பட்டது என்றும் அதில் அவர் லேசான காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. ஜோஷியையும் மற்றும் பலரையும் போலீசார் கைது செய்தனர்.  மேலும் பல இடங்களில் நடந்த போராட்டத்தின்போது போலீசார் தடியடி நடத்தியதில் காங்கிரஸ் தலைவர்கள் பலர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: