முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழிக்கு ஜெயிலா? பெயிலா? இன்று தீர்ப்பு

வெள்ளிக்கிழமை, 13 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுடெல்லி, மே 14 - 2 ஜி.ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு ஜாமீன் வழங்கப்படுமா என்பது இன்று தெரியவரும். இதுதொடர்பான உத்தரவு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செல்போல் கம்பெனிகளுக்கான 2 ஜி.ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை குழு கடந்த ஆண்டு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த ஊழலுக்கு காரணமான அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டு ஏற்கனவே திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். டி.பி.ரியாலிட்டீஸ் அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா, ராசாவின் முன்னாள் உதவியாளர்கள் சந்தோலியா, சித்தார்த் பெகூரா ஆகியோரும் இதில் அடங்குவர். ஏற்கனவே இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த சி.பி.ஐ . அதிகாரிகள் இரண்டாவது குற்றப்பத்திரிகையையும் இதே நீதிமன்றத்தில் கடந்த மாதம் தாக்கல் செய்தனர். இந்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும் கலைஞர் டி.வி.யின் பங்குதாரருமான கனிமொழி எம்.பி.யின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இதேபோல கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனரும் பங்குதாரருமான சரத்குமாரின் பெயரும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. 

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கனிமொழி, சரத்குமார் இருவரும் கடந்த 6 ம் தேதி  சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்கள். அப்போது கனிமொழி, சரத்குமார் இருவரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு  மனுக்களை தாக்கல் செய்தனர். கனிமொழி சார்பில் வாதாடிய பிரபல வக்கீல் ராம்ஜேத்மலானி, கலைஞர் டி.வி.யில் கனிமொழிக்கு எந்த ஈடுபாடும் இல்லை என்றும் அதனால் அவருக்கும் இந்த ஊழலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் எனவே அவரை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார்.

ஆனால் கலைஞர் டி.வி.யில் கனிமொழிக்கு முக்கிய ஈடுபாடு இருக்கிறது என்று கூறிய சி.பி.ஐ வழக்கறிஞர் யு.யு.லலித், கனிமொழியை ஜாமீனில் விட எதிர்ப்பு தெரிவித்தார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சட்டவிரோதமாக ஆதாயம் ஈட்டிய ஒரு நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டி.வி.க்கு ரூ. 200 கோடி கைமாறியுள்ளது என்றும் அதில் கனிமொழிக்கும் தொடர்பு உள்ளது என்றும் சி.பி.ஐ. தரப்பில் வாதிடப்பட்டது. வாத பிரதிவாதங்களைக் கேட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி இது தொடர்பான தீர்ப்பை வருகிற 14 ம் தேதிக்கு(இன்றைக்கு) ஒத்திவைத்தார். இதேபோல சரத்குமாரின் ஜாமீன் மனுமீதான தீர்ப்பும் இதே தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. எனவே கனிமொழியும் சரத்குமாரும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராக உள்ளனர். அப்போது அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படுமா என்பது தெரியவரும். ஒருவேளை ஜாமீன் கிடைக்காவிட்டால் இவர்கள் இருவரும் நீதிமன்ற காவலுக்கு (ஜெயிலுக்கு) அனுப்பி வைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. இது தொடர்பான தீர்ப்பு இன்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வெளியிடப்பட உள்ளது. 

கனிமொழி ஏற்கனவே அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்திலும் ஆஜராகி இருக்கிறார். இதேபோல சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னிலையிலும் அவர் ஏற்கனவே ஆஜராகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்