முக்கிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் மம்தா அமோக வெற்றி

வெள்ளிக்கிழமை, 13 மே 2011      இந்தியா
Mamta1

 

கொல்கத்தா, மே.14 - மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலம் அம்மாநிலத்தில் கடந்த 34 ஆண்டுகளாக இருந்து வந்த இடதுசாரி கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

மேற்கு வங்காள மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல்கள் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டன. இம்மாநிலத்தில் மாவோயிஸ்ட், நக்சலைட் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு காரணம் கருதி 6 கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்பட்டன. மாநில போலீசார் துணை ராணுவ படையினர் ஆகியோர் அதிக அளவில் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த தேர்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணி கட்சிகள் ஓரணியாகவும் மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் மற்றொரு அணியாகவும் போட்டியிட்டன. இந்த தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. ஆரம்பம் முதற்கொண்டே முன்னிலை வகித்த திரிணாமுல் காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றி பெற்றது. கடைசியாக கிடைத்த தகவலின்படி மொத்தமுள்ள 294 சட்டமன்ற தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி  226 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.  அறுதிப்பெரும்பான்மை பெற்று  ஆட்சியைக் கைப்பற்றி மேற்கு வங்காளத்தில் ஒரு  வரலாற்றை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 34 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த இடதுசாரி கட்சிகளுக்கு இந்த தேர்தலில் பலத்த அடி கொடுக்கப்பட்டுள்ளது. இடதுசாரி கூட்டணி கட்சிகள் 62 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. மேற்கு வங்காளத்தில் சிங்கூர், நந்திகிராம் ஆகிய இடங்களில் நடந்த நில ஆர்ஜித எதிர்ப்பு போராட்டங்களின்போது ஏற்பட்ட கலவரங்கள் இந்த தேர்தலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. மேலும் இடதுசாரி கட்சியினரின் வன்முறை மற்றும் மோதல் போக்குகள் காரணமாகவும் இடதுசாரி கட்சிகளுக்கு இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் இடது கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜோதிபாசுதான் நீண்டகாலமாக முதல் அமைச்சராக பதவியில் இருந்தார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு அந்த முதல்வர் பதவிக்கு புத்ததேவ் பட்டாச்சார்யா நியமிக்கப்பட்டார். அதன்பிறகு ஜோதிபாசு மரணமடைந்துவிட்டார். புத்ததேவ் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்ற பிரச்சாரத்தை திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பேனர்ஜி ஒரு முக்கிய ஆயுதமாக கையிலெடுத்துக் எடுத்துக்கொண்டார். கடந்த 34 ஆண்டுகளில் மேற்கு வங்காளத்தில் வளர்ச்சி பணிகள் எதுவுமே நடக்கவில்லை என்று கூறியும் அவர் பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்திற்கு இப்போது நல்ல பலன் கிடைத்துள்ளதாக அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார். இந்த வெற்றியை திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அமைதியான முறையில் கொண்டாடும்படியும் அவர் கேட்டுக்கொண்டார். அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ள திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைமையில் புதிய ஆட்சி மேற்கு வங்காளத்தில் மலர்கிறது. புதிய முதலமைச்சராக அக்கட்சியின் தலைவர் மம்தா பேனர்ஜி வருகிற 18 ம் தேதி பதவி ஏற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் கொல்கத்தாவில் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன. 

இந்த தேர்தலில் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா உள்பட இடதுசாரி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பலர் பெரும் தோல்வியை சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நேற்று திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றதை அடுத்து கொல்கத்தாவில் உள்ள மம்தா பேனர்ஜியின் இல்லத்தில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு மம்தாவை வாழ்த்தி  கோஷங்களை எழுப்பினர். இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். மேலும் பட்டாசுகளை வெடித்தும் கட்சித் தொண்டர்கள் களிப்பில் ஈடுபட்டனர். மம்தா முதலமைச்சராக பதவியேற்க இருப்பதால் அவர் தனது மத்திய ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார். எனவே மத்திய ரயில்வே அமைச்சர் பதவிக்கு வேறு ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அந்த பதவியும்கூட தனது திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று மம்தா பேனர்ஜி காங்கிரஸ் கட்சியை வலியுறுத்தியுள்ளார்.

இடதுசாரி கட்சிகளின் இரும்புக் கோட்டையாக பல ஆண்டுகாலமாக திகழ்ந்துவந்த மேற்குவங்காளத்தில் தனது அயராத அரசியல் பணிகள் மூலம் இடதுசாரி கட்சிகளை வீழ்த்திய பெருமை மம்தாவையே சேரும். 

இதை ஷேர் செய்திடுங்கள்: