முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட்டில் இருந்து விடைபெற்றார் தில்ஷான்

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

கொழும்பு, அக். 11 - இலங்கையின் முன்னணி பேட்ஸ்மேனான திலகரத்னே தில்ஷான், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தில்ஷான் கூறுகையில், இளம் வீரர்களுக்கு வழி விடும் வகையில் டெஸ்ட்டில் இருந்து ஒய்வு பெறும் முடிவை எடுத்துள்ளேன். ஜிம்பாப்வே தொடருக்குப் பின் எனது ஓய்வு குறித்து அறிவிக்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் ஜிம்பாப்வே தொடர் தள்ளி வைக்கப்பட்டது என்று தெரிவித்தார். 

அதிரடி ஆட்டத்தின் மூலம் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்ற தில்ஷான் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டங்களில் தொடர்ந்து விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து தேசிய தேர்வு குழுவினரிடம் ஆலோசிக்க உள்ளேன். நான் தேவை என அவர்கள் கருதினால் 2015 ம் ஆண்டு உலக கோப்பை போட்டி வரை ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடுவேன் என்று தில்ஷான் குறிப்பிட்டார். 

36 வயது நிரம்பிய தில்ஷான், 1999 ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். கடந்த 14 ஆண்டுகளாக இலங்கை அணிக்கு விளையாடி வந்தார். அணிக்கு கேப்டனாக இருந்த போது 2011 ம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தில்ஷான் 193 ரன்கள் அடித்தார். இது அவரது டெஸ்ட் அதிகபட்சமாகும். 

இந்த ஆண்டு மார்ச் மாதம் கொழும்பில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் தில்ஷான் விளையாடியது அவரது கடைசி டெஸ்ட்டாக அமைந்தது. அந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் 59 ரன்களும் 2 வது இன்னிங்ஸில் ரன் ஏதுமின்றியும் தில்ஷான் ஆட்டமிழந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்