முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா விவகாரம்: அமைச்சர் ஷிண்டே திட்டவட்டம்

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக். 11 - ஆந்திராவை பிரித்து தனித் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கும் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியே தீரும். எந்த எதிர்ப்பு வந்தாலும் அதில் மறு சிந்தனை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே திட்டவட்டமாக தெரிவித்தார். 

ஆந்திராவை பிரித்து தனித் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்து விட்டது. இது தொடர்பாக விவாதிக்க மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் இன்று டெல்லியில் நடக்கிறது. இதனிடையே தெலுங்கானா மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் சீமாந்திரா பகுதியில் கடும் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தால் செல்போன், ஏ.டி.எம். சேவைகள் உட்பட அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. 

இம்மாநிலத்தில் 13 மாவட்டங்களில் மின்சார ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் இந்த மாவட்டங்கள் இருளில் மூழ்கின. நேற்று தற்காலிக உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் மக்கள் இருளில் இருந்து மீள ஓரளவு வழி ஏற்பட்டுள்ளது. இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கும் முடிவில் அரசு உறுதியாக உள்ளது. அந்த திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம். சீமாந்திரா பகுதியில் எதிர்ப்புகள் இருந்தாலும் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கும் முடிவில் மாற்றம் இல்லை. தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர்கள் குழு அது பற்றி ஆராய்ந்து விரைவில் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது. நிச்சயம் ஆந்திராவுக்கு நீதி கிடைக்கும். அந்த நீதி அம்மாநில மக்களுக்கு வழங்கப்படும். அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலை இருப்பதால்தான் இதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இவ்வாறு கூறிய அவரிடம் ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் திட்டம் அரசுக்கு உள்ளதா என்று கேட்ட போது இப்போதைக்கு சொல்ல முடியாது என்றார் ஷிண்டே. மேலும் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் தெலுங்கானா மாநிலம் அமைக்கும் விஷயத்தில் மறு சிந்தனை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த முடிவில் இருந்து மத்திய அரசு பின்வாங்காது. அதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் எனக்கு தெரியவில்லை என்று மேலும் தெரிவித்தார் ஷிண்டே. இது தொடர்பான மசோதா பாராளுமன்றம் நவம்பரில் கூடும் போது கொண்டு வரப்படுமா என்று கேட்ட போது, பார்ப்போம் என்று ரத்தினசுருக்கமாக பதிலளித்து தனது பேட்டியை நிறைவு செய்தார் ஷிண்டே. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்