முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூப்பர் ஹீரோ சச்சின்: இங்கிலாந்து ஊடகங்கள் புகழாரம்

சனிக்கிழமை, 12 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

லண்டன், அக். 13 - இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சூப்பர் ஹீரோ என்று இங்கிலாந்து ஊடகங்கள் புகழாரம் சூட்டியுள்ளன. 

தனது 200 வது டெஸ்டுடன் சச்சின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு பாராட்டுக்கள் குவியத் தொடங்கியுள்ளன. இங்கிலாந்தில் உள்ள ஊடகங்கள் சச்சினுக்கு புகழாரம் சூட்டியுள்ளன. சச்சின் சூப்பர் ஹீரோ என்றும் கால்பந்து ஜாம்பவான் பீலே, டென்னிஸ் சூப்பர் ரோஜர் பெடரர் ஆகியோரை போன்றவர் சச்சின் என்றும் புகழாரம் சூட்டியுள்ளன. தி டைம்ஸ் இதழில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக் ஆதர்டன், நமது காலத்தில் வாழும் சூப்பர் ஹீரோ சச்சின். பெரும்பாலான கிரிக்கெட் சாதனைகளை தன்னகத்தே வைத்திருப்பவர் அவர். இந்தியாவில் அவரை கிரிக்கெட் கடவுளாக ரசிகர்கள் பார்க்கிறார்கள் என்று புகழாரம் சூட்டியுள்ளார். 

இதைப் போலவே மிர்ரர் இதழிலும் சச்சினை பாராட்டி கட்டுரை எழுதப்பட்டுள்ளது. சர்டான் பிராட்மேன் டெஸ்ட் கிரிக்கெட்டில் சராசரியாக 99.94 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ரன் குவித்து 2 முறை உலக சாதனையை முறியடித்தவர் பிரையன் லாரா. இவையெல்லாம் சிறப்பான சாதனைகள். அதைப் போலவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 சதம் அடித்துள்ள சச்சினின் சாதனை ஒப்பிட முடியாதது. 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பது நினைத்து பார்க்க முடியாதது. தெய்வத்தன்மை வாய்ந்தது. 

கால்பந்து ஜாம்பவான் பீலேவின் 1,281 சர்வதேச கோல்கள், டென்னிஸ் சூப்பர் ஸ்டார் ரோஜர் பெடரரின் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், சர்ஸ்டீவ் ரெட்கிரேவ்ஸின் 5 ஒலிம்பிக் தங்கப்பதக்கங்கள் ஆகியவற்றுக்கு நிகரானது சச்சினின் சாதனை என்று மிர்ரர் இதழில் புகழாரம் சூட்டியுள்ளார். இதை போலவே பிரிட்டனில் இருந்து வெளியாகும் கார்டியன், ஸ்கைஸ்போர்ட்ஸ், தி இன்டிபென்டன்ட் ஆகிய இதழ்களும் சச்சினுக்கு புகழாரம் சூட்டியுள்ளன. 

சம காலத்தை சேர்ந்த மகா கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் புகழாரம் சூட்டியுள்ளன. சிட்னி மார்னிங் ஹெரால்ட் இதழில் சச்சின் குறித்து, இந்தியாவில் கிரிக்கெட் கடவுளாக ரசிகர்களால் போற்றப்படுகிறார் சச்சின். கிரிக்கெட் வரலாற்றிலேயே 2 சிறந்த பேட்ஸ்மேன்கள்தான் உள்ளனர். ஒன்று டான்பிராட்மேன். மற்றொன்று சச்சின் டெண்டுல்கர் என அந்த இதழில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் டெய்லி டெலிகிராப் உள்ளிட்ட பத்திரிகைகளும் சச்சினின் ஓய்வு முடிவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்