முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டி தொகுதியை 34 ஆண்டுகளுக்குப் பின் கைப்பற்றியது அ.தி.மு.க.

வெள்ளிக்கிழமை, 13 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

ஊட்டி, மே.14 - ஊட்டி தொகுதியை 34 ஆண்டுகளுக்குப் பின் அ.தி.மு.க.,கைப்பற்றியது. இது குறித்த விவரமாவது:​மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற சுற்றுலா நகரமான ஊட்டியின் பெயரில் அமையப்பெற்ற உதகமண்டலம் சட்டமன்ற தொகுதி கடந்த 1957ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அன்று முதல் 1957 மற்றும் 1962ம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. 1967ம் ஆண்டு சுதந்திரா கட்சியும், 1971ம் ஆண்டு தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளன. ஊட்டி தொகுதியில் கடந்த 1977ம் ஆண்டு அ.தி.மு.க.சார்பில் போட்டியிட்ட போ.கோபாலன் வெற்றி பெற்றார். அதன் பின்னர் 1980, 1984, 1989, 1991, 2001 மற்றும் 2006 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் வெற்றி பெற்று ஊட்டி தொகுதியை காங்கிரஸ் கோட்டையாக நினைத்து வந்தது. இடையில் 1996ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸில் இருந்து பிரிந்து உருவான த.மா.கா.,வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட தி.மு.க.,வெற்றி பெற்றது.

இந்த நிலையில் 2011ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற்றது. இத்தேர்தலில் ஊட்டி தொகுதியில் அ.தி.மு.க.,சார்பில் அக்கட்சியின் குந்தா ஒன்றிய செயலாளர் புத்திசந்திரனும், காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கணேசும் போட்டியிட்டனர். இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே முன்னனியில் இருந்து  வந்த அ.தி.மு.க.வேட்பாளர் புத்திசந்திரன்  61,605 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கணேஷை 7,545 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து காங்கிரஸ் கோட்டை என்று பேசப்பட்டு வந்த ஊட்டி தொகுதியில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு அ.தி.மு.க.,வெற்றி பெற்று தொகுதியை தன்வசப்படுத்தியது. இதன் மூலம் காங்கிரஸ் கோட்டை என்று அனைவராலும் பேசப்பட்டு வந்த ஊட்டி தொகுதி, இத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரால் தவிடு பொடியாக்கப்பட்டது.

 

புத்தி சந்திரன்(அ.தி.மு.க) 61,605

ஆர்.கணேஷ் (காங்கிரஸ்) 54,060

பி.குமரன் (பா.ஜ.க.)      2,706

வெற்றி வித்தியாசம் -7,545 வாக்குகள்

ஊட்டி தொகுதியில் அ.தி.மு.க.,வெற்றி பெற்றதன் மூலம் கடந்த 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெற்றி பெற்று காங்கிரஸ் கோட்டையை தகர்த்தெரிந்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்