முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய மந்திரி கருத்துக்கு இ.கம்யூ. பொலிட்பீரோ கண்டனம்

வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, அக். 19 - நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட தொழிலதிபருக்கு ஆதரவாக ஒரு மத்திய அமைச்சர் கருத்து கூறுவது அதிர்ச்சியளிக்கிறது என்று இ. கம்யூனிஸ்டு பொலிட்பீரோ தெரிவித்துள்ளது. 

நாட்டுக்கு ரூ. 1.86 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய ஊழல்தான் நிலக்கரி சுரங்க ஊழல். பிரதமர் மன்மோகன்சிங் நிலக்கரி துறை அமைச்சராக இருந்த போது நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. சமீபத்தில் பிரபல தொழிலதிபரும், ஹிண்டால்கோ நிறுவன சேர்மனுமான குமாரமங்கலம் பிர்லா மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. மேலும் நிலக்கரி துறையின் முன்னாள் செயலாளர் பி.சி. பரேக் மீதும் சி.பி.ஐ. எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. ஆனால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகு பி.சி. பரேக் ஆவேசமாக பேட்டியளித்தார். இந்த வழக்கில் பிரதமரையும் ஒரு சதியாளராக சேர்க்க வேண்டும் என்று அவர் போர்க்கொடி உயர்த்தினார். இந்த விவகாரத்தில் நேர்மையான அதிகாரிகளை கொடுமைப்படுத்துவதா என்று முன்னாள் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். 

இந்த நிலையில் மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா, தொழிலதிபர் பிர்லாவுக்கு ஆதரவாக சில கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு இ.கம்யூனிஸ்டு கட்சியின் மேலிடம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இ.கம்யூனிஸ்டு பொலிட்பீரோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:_

ஒரு மத்திய அமைச்சராக இருப்பவர்(ஆனந்த் சர்மா) தொழிலதிபருக்கு ஆதரவாக அவரை பாதுகாக்கும் விதத்தில் கருத்து தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தொழிலதிபர் பிர்லா ஒரு அப்பாவி என்கிறார் அமைச்சர். இது இந்த வழக்கை திசைதிருப்பும் முயற்சியாகும். மேலும் மத்திய புலனாய்வு துறையையே அச்சுறுத்தும் செயலாகும். நிலக்கரி தொழிலை தனியார் மயமாக்கும் அரசின் கோழைத்தனமான கொள்கையை நியாப்படுத்த கூடாது. தனியார் மயமாக்குவதுதான் ஊழலுக்கே அடிப்படை காரணம். எனவே இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. முழுமையான விசாரணை நடத்தி பயமின்றி யாருக்கும் சாதகம் காட்டாமல் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் சட்டவிரோதமாக சில கம்பெனிகள் பலனடைந்துள்ளன. நிலக்கரி துறை அமைச்சகத்தின் பொறுப்பில் பிரதமர் இருந்த போதுதான் இந்த முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே இதுபற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும். இவ்வாறு இ. கம்யூனிஸ்டு பொலிட்பீரோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்