முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வை படுகுழிக்கு தள்ளிய ஸ்பெக்ட்ரம் ஊழல்

வெள்ளிக்கிழமை, 13 மே 2011      அரசியல்
Image Unavailable

மதுரை,மே.14 - நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த கட்சியும் சரி, அதன் கூட்டணி கட்சிகளும் சரி, மாபெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவே தோற்றுப் போயிருக்கிறார். அது மட்டுமல்ல, தி.மு.க.வை சேர்ந்த முக்கிய தலைகள் எல்லாம் உருண்டிருக்கின்றன. வில்லிவாக்கத்தில் அன்பழகன், கன்னியாகுமரியில் சுரேஷ் ராஜன், வீரபாண்டி ஆறுமுகம், கே.என். நேரு, எ.வ. வேலு போன்ற அமைச்சர்கள் எல்லாம் மண்ணைக் கவ்வியிருக்கிறார்கள். தி.மு.க. வெறும் 33 இடங்களை மட்டுமே கைப்பற்றியதாக நேற்று நண்பகல் வெளியான தகவல் தெரிவித்தது. இந்த எதிர்ப்பு அலையில் தப்பித்தவர் தமிழக முதல்வர் கருணாநிதி மட்டும்தான். இப்படி ஒரு மாபெரும் வீழ்ச்சி ஏற்பட காரணம் என்ன? அதுதான் 2 ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலாகும். இந்த ஊழல் மூலம் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 1.76 லட்சம் கோடியாகும். இந்த ஊழல் மூலம் கலைஞர் தொலைக்காட்சியும் பயனடைந்தது. சினியுக் நிறுவனம் மூலம் இந்த டி.விக்கு கிடைத்த தொகை ரூ. 200 கோடி ஆகும். இது தொடர்பாக கருணாநிதியின் மகள் கனிமொழியிடம் விசாரணை நடந்து வருகிறது. அவருக்கு பெயில் கிடைக்குமா? அல்லது ஜெயில்தான் கிடைக்குமா என்பது இன்று தெரிந்து விடும்.  இந்த ஊழல்தான் தி.மு.க.வின் வீழ்ச்சிக்கு பெரும் காரணமாகி விட்டது. 

தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட்சிகள் எல்லாம் இந்த ஊழலை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தின. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தான் மேற்கொண்ட பிரச்சாரங்களில் எல்லாம் ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றியும், கருணாநிதியின் குடும்ப ஆட்சி பற்றியும் மக்கள் மத்தியில் புட்டுபுட்டு வைத்தார். இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள். இதற்கு ஸ்பெக்ட்ரம் ஊழல்தான் முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது. மேலும் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, 5 ஆண்டு காலம் நீடித்த கடுமையான மின்வெட்டு, மணல் கடத்தல், ஆட்கடத்தல், ரேசன் அரிசி கடத்தல், கொலை, கொள்ளை போன்றவைகளும் மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்பி இருக்கிறது. இதே போல் கேரள மாநிலத்திலும் ஊழலை மையமாக வைத்தே பிரச்சாரம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்