முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மு.க.அழகிரியின் பிடியில் இருந்து மதுரை மீண்டது

சனிக்கிழமை, 14 மே 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,மே.14 - தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடைந்திருப்பதன் மூலம் கருணாநிதியின் சர்வாதிகார ஆட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் மு.க.அழகிரியின் பிடியில் இருந்து மதுரையும் மீண்டுவிட்டதாக மதுரை மக்கள் கருதுகிறார்கள். தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி கிட்டத்தட்ட 200 இடங்களை கைப்பற்றி வரலாறு காணாத சாதனை படைத்திருக்கிறது. அ.தி.மு.க. தனித்தே ஆட்சி அமைக்கிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா 3-வது முறையாக தனித்தே ஆட்சி அமைக்கிறார். இந்த தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடைய பல்வேறு காரணங்களை சொல்லலாம். அதில் முழு முதல் காரணம் 2 ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலாகும். காரணம் இந்த ஊழலால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 1.76 லட்சம் கோடியாகும். இந்த ஊழல் மூலம் கலைஞர் டி.வி.க்கு கிடைத்த ஆதாயமோ ரூ.200 கோடியாகும். இந்த ஊழலை பற்றி ஜெயலலிதாவும் மற்றும் இதர அரசியல் கட்சி தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தின்போது மக்களுக்கு எடுத்துரைத்தனர். மேலும் 5 ஆண்டுகாலம் தமிழ்நாட்டை இருளில் மூழ்கடித்தவர் கருணாநிதி. இவரது ஆட்சியில் நாள் தவறாமல் மின்வெட்டு மணிக்கணக்கில் நீடித்தது. மக்கள் தூங்க முடியாமல் தவித்தார்கள். மாணவர்கள் படிக்கமுடியாமல் அதிக அளவில் மார்க்குகள் வாங்க முடியவில்லை. நெசவு மற்றும் ஜவுளித்தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறுந்தொழில்கள், கைத்தொழில்கள் அழிந்துபோயின. விலைவாசியோ விண்ணைத்தொட்டது. அதுமட்டுமா தி.மு.க. ஆட்சியில் அரிசி கடத்தல், மணல் கடத்தல், இன்னும் சொல்லப்போனால் சொத்துக்காக ஆள் கடத்தல் எல்லாம் நடந்தது. அதற்கு உதாரணம் என்.கே.கே.பி.ராஜா என்று சொல்லலாம். கோவையில் இரண்டு இளம் மொட்டுகள் சமூக விரோதிகளால் கடத்தி கொல்லப்பட்டனர். இப்படி மோசமான ஆட்சியாக திகழ்ந்தது கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சி. இந்த ஆட்சியை ஒரு சர்வாதிகார ஆட்சி என்றே சொல்லலாம். இந்த ஆட்சியில் பத்திரிகையாளர்களும் பாதிக்கப்பட்டனர். கிரானைட் ஊழல் பற்றி செய்தி வெளியிட்ட தினபூமி ஆசிரியர் மணிமாறன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அவர் மீது பலவிதமான பொய் வழக்குகளும் போடப்பட்டன. அவருக்கு பல மிரட்டல்களும் வந்தன. ஆனாலும் அவர் பொருட்படுத்தாமல் கிரானைட் ஊழல் பற்றி தொடர்ந்து செய்திகளை துணிச்சலோடு வெளியிட்டு வந்தார். இதர பத்திரிகையாளர்களும் தி.மு.க. ஆட்சியில் பாதிக்கப்பட்டனர். பத்திரிகையாளர்களை கருணாநிதி அரசு பழிவாங்கியது. ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் வகையில் அவர்கள் மீது பல வழக்குகள் போடப்பட்டன. இப்படியாக நடந்த ஒரு சர்வாதிகார ஆட்சி இப்போது வீழ்ந்துவிட்டது. இந்த தேர்தல் மூலமாக மு.க. அழகிரியின் பிடியில் இருந்து மதுரையும் மீண்டுவிட்டதாக மதுரை மக்கள் கருதுகிறார்கள். எது எப்படியோ ஒரு சர்வாதிகார ஆட்சி வீழ்ந்து தற்போது மக்களாட்சி மலர்ந்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்