முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரி ஒதுக்கீட்டில் பிரதமரின் பங்கு: அலுவலகம் விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, அக். 21 - ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு தகுதி அடிப்படையில்தான் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன என்று பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. 

சர்ச்சைக்குள்ளான இப்பிரச்சினையில் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் பிரதமரின் பங்கு என்ன என்பதை விளக்கி அவரது அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பு வருமாறு:-

தலபிரா 2,3 வது நிலக்கரி சுரங்கங்கள் தகுதி அடிப்படையில்தான் ஒதுக்கப்பட்டுள்ளன. வழக்கமாக தேர்வுக்குழு வழங்கும் பரிந்துரைப்படி நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கப்படும். ஆனால் இந்த விவகாரத்தில் குழுவின் பரிந்துரைக்கும் இறுதி முடிவுக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. ஒடிசாவின் சம்பல்பூரில் ஒருங்கிணைந்த அலுமினியம் திட்டத்துக்காக 650 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தேவைப்படும் நிலக்கரியை தலிபரா 2 வது சுரங்கத்தில் இருந்தும், ஹிராகுட் அலுமினியம் ஆலை விரிவாக்கப் பணிக்கு தேவைப்படும் 100 மெகாவாட் மின்சாரத்தை தலபிரா 3 வது சுரங்கத்தில் இருந்தும் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒதுக்க வேண்டும் என அதன் உரிமையாளரான ஆதித்யா பிர்லா பிரதமருக்கு 2005 மே மாதம் 7 ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி, பிரதமருக்கு 2005, ஜூன் 17 ம் தேதி மீண்டும் கடிதம் எழுதினார். இதையடுத்து அவரது கடிதங்களை நிலக்கரி துறைக்கு பிரதமர் அலுவலகம் அனுப்பி கருத்து கேட்டது. 

அதன் பேரில் நிலக்கரி துறை 2005 ஆகஸ்ட் மாதம் அனுப்பிய அறிக்கையில், தலபிரா 2 வது நிலக்கரி சுரங்கத்தை ஒதுக்க மூன்று போட்டியாளர்களை தேர்வு குழு கண்டறிந்துள்ளது. அதில் இடம்பெற்றுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்கு 2 வது சுரங்கத்தை ஒதுக்க தேர்வு குழு முடிவு செய்துள்ளது. மகாநதி நிலக்கரி நிறுவனத்துக்கு தலபிரா 3 வது நிலக்கரி சுரங்கம் ஏற்கனவே தனியாக ஒதுக்கப்பட்டிருந்தது. அதனால் அந்நிறுவனமும் நெய்வேலி நிறுவனமும் கூட்டு ஒப்பந்தம் செய்து 2,3 ஆகிய நிலக்கரி சுரங்கங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது. 

இந்நிலையில் பிரதமருக்கு ஒடிசா முதல்வர் 2005, ஆகஸ்ட் 17 ம் தேதி கடிதம் அனுப்பினார். அதில் அலுமினியத்தை உற்பத்தி செய்யும் ஆலைகள் மூலம் ஒடிசாவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். உற்பத்தி துறை வளர்ச்சி பெறும். அதனால் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்க அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஒடிசா முதல்வர் கேட்டுக் கொண்டிருந்தார். இதையடுத்து 2005 ஆகஸ்ட் 29 ம் தேதி நிலக்கரி துறை கோப்பை பிரதமர் பார்த்த போது ஒடிசா முதல்வரின் கடிதமும் பரிசீலிக்கப்பட்டது. அதனால் முதல்வரின் கடிதத்தை பரிசீலித்து மீண்டும் அறிக்கை தரும்படி நிலக்கரி துறையை பிரதமர் கேட்டுக் கொண்டார். 

இதையடுத்து நிலக்கரி துறை அனுப்பிய குறிப்பில், தலபிரா 2,3 ஆகிய நிலக்கரி சுரங்க வளங்களை ஒரே நிலக்கரி வளமாக கருதி ஹிண்டால்கோ நெய்வேலி நிலக்கரி நிறுவனம், மகாநதி நிலக்கரிநிறுவனம் ஆகியவை கூட்டு ஒப்பந்தம் செய்து பெற்று கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி தலபிரா 2,3 ஆகிய சுரங்க உற்பத்தியில் மகாநதி நிலக்கரி நிறுவனம் 70 சதவீதமும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் 15 சதவீதம், ஹிண்டால்கோ 15 சதவீதம் என்ற விகிதத்தில் ஒதுக்கீடு பெறலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. ஹிண்டால்கோ _ நெய்வேலி நிறுவன கூட்டை பொருத்தவரை பிரதமர் ஏற்கனவே பரிந்துரைத்த விதிமுறைகளை தளர்த்த வேண்டியிருக்கும். ஆனால் மகாநதி நிலக்கரி நிறுவனத்தின் பங்கிலிருந்து நெய்வேலி நிறுவனத்துக்கு அளித்து இதனை சரி செய்யலாம். இரு பொதுத்துறை நிறுவனங்களின் நிலக்கரி தேவையை பூர்த்தி செய்வதுடன் அவற்றின் மின் திட்டங்களை நிறைவேற்றும்படி செய்து அவற்றின் நலன்களையும் பாதுகாக்க இயலும். 

இந்த ஏற்பாடு தகுதி அடிப்படையில் இருந்ததால் நிலக்கரி துறை பரிந்துரையை பிரதமர் ஏற்றுக் கொண்டு 2005 அக்டோபர் 2 ம் தேதி ஒப்புதல் வழங்கினார் என்று பிரதமர் அலுவலகம் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்