முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரி சுரங்க முறைகேடு: நாளை சி.பி.ஐ. அறிக்கை தாக்கல்

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, அக். 21 - நிலக்கரி சுரங்க முறைகேடுதொடர்பாக நாளை 22 ம் தேதி மத்திய புலனாய்வு துறை(சி.பி.ஐ.) தனது நிலை அறிக்கையை தாக்கல் செய்கிறது. இந்த அறிக்கையில் பல முக்கிய தகவல்கள் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை போல 1.80 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய ஊழல்தான் நிலக்கரி சுரங்க ஊழல். இந்த ஊழல் தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் மீதும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. காரணம், அவர்நிலக்கரி துறை அமைச்சராக இருந்த போதுதான் நிலக்கரி சுரங்கங்களுக்கான ஒதுக்கீடுகள் நடைபெற்றன. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஆதித்ய பிர்லா குழும தலைவர் குமாரமங்கலம் பிர்லா, நிலக்கரி துறை முன்னாள் செயலாளர் பி.சி. பரேக் உள்ளிட்ட பலர் மீது சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தது. சி.பி.ஐ. தாக்கல் செய்த 14 வது முதல் தகவல் அறிக்கை இதுவாகும். இதனிடையே குற்றம் சாட்டப்பட்ட பி.சி. பரேக் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் நாங்கள் சதியாளர்கள் என்றால் இந்த விஷயத்தில் முடிவெடுத்த பிரதமரும் ஒரு சதியாளரே. ஆகவே அவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பகிரங்கமாக போர்க்கொடி உயர்த்தினார். இவருக்கு ஆதரவாக சில அதிகாரிகளும் கருத்து கூறினார்கள். நேர்மையான அதிகாரிகளை கொடுமைப்படுத்துவதா என்று அவர்கள் கேள்வி எழுப்பினார்கள். இந்த நிலையில் இந்த முறைகேடு தொடர்பாக பிரதமர் அலுவலகமும் விளக்கமளித்துள்ளது. அதில் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதில் எந்த தவறும் நடக்கவில்லை. பிரதமர் எந்த தவறும் செய்யவில்லை என்று பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.இதனிடைய இந்த முறைகேடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நாளை 22 ம் தேதி சி.பி.ஐ. தனது நிலை அறிக்கையை தாக்கல் செய்கிறது. அந்த அறிக்கையில் பல பரபரப்பான முக்கிய தகவல்கள் இடம் பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்