முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாலு பிரசாத் எம்.பி. பதவியை இழந்தார்: சபாநாயகர்

செவ்வாய்க்கிழமை, 22 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, அக்.23 - பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டிரீய தனதளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் எம்.பி. பதவியை இழந்தார். இதை நேற்று டெல்லியில்    லோக்சபை சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார்.

 மாட்டுத் தீவன ஊழலில் சிக்கிய லாலு பிரசாத் கோர்ட் தீர்ப்பு மூலம் சிறையில் அடைக்கப்பட்டார்.  குற்ற வழக்குகளில் சிக்கி 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்கள் எம்.பி. எம்.எல்.ஏ. பதவி வகிக்கத் தகுதியற்றவர்கள் என்று சுப்ரீம் கோர்ட் கடந்த ஜூலை மாதம் அதிரடித் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து குற்ற வழக்ககுளில் சிக்கி தண்டனை பெற்ற எம்.பி. எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டது. இந்தத் தீர்ப்பை முடக்கும் வகையில் சட்ட திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முயன்றது. ஆனால் நாடெங்கும் எழுந்த எதிர்ப்பால் இதை மத்திய அரசு கைவிட்டது. 

சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி நடவடிக்கை காரணமாக மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர் ரஷீத் மசூத் முதன்முதலாக தனது பதவியைப் பறிகொடுத்தார். தகுதி இல்லாதவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கொடுத்த ஊழல் காரணமாக இவர் எம்.பி. பதவியை இழந்தார். 

இந்த நிலையில் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிக்கி தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவ் மற்றும் 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை பெற்ற ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் சர்மா ஆகிய இருவரின் எம்.பி. பதவி எப்போது பறிக்கப்படும் என்ற குழப்பம் நிலவியது. பதவி பறிப்பு உத்தரவை யார் வெளியிடுவது என்ற சட்ட சிக்கல் எழுந்தது. லாலு பிரசாத்,  ஜெகதீஷ் சர்மா ஆகிய இருவரையும் உடனே தகுதி நீக்கம் செய்யலாம் என்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வாகனவதி யோசனை தெரிவித்திருந்தார். பிறகு அதை அவர் பரிந்துரையாகவும் எழுதிக் கொடுத்தார். இதைத் தொடர்ந்து லாலு பிரசாத், ஜெகதீஷ் சர்மாவின் பதவி பறிப்பு குறித்து பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நேற்று இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தார். 

 இதன்பிறகு லாலு பிரசாத், ஜெகதீஷ் சர்மா ஆகிய இருவரது பகவியும் பறிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலகம் அறிவித்தது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி லாலு மீதான பதவி பறிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் சப்ரா, ஜெகனாபாத் ஆகிய  இரு தொகுதிகளுக்கான இடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுபற்றி தலைமை தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளை தேர்தல் கமிஷன் ஆய்வு செய்யும். சப்ரா தொகுதியிலிருந்து லாலு பிரசாத் யாதவும்,   ஜெகனாபாத் தொகுதியிலிருந்து ஜெகதீஷ் சர்மாவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். ஒரு தொகுதி காலியாக இருந்தால் 6 மாதத்துக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.  ஆனால் பாராளுமன்றத்தின் பதவிக் காலம் இன்னும் 5 மாதங்களில் முடிவடைய உள்ளதால் இந்த  இரு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்