முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: தடுத்து நிறுத்த முதல்வர் கடிதம்

திங்கட்கிழமை, 28 அக்டோபர் 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, அக்.29 - கடந்த அக்.26 ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 6 அப்பாவி மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அதில் அவர்களது படகு சேதமடைந்துள்ளது.  இது போன்று இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது  தாக்குதல் நடத்துவது கண்டனத்துக்குரியது. இந்தத் தாக்குதல்களை தடுத்து நிறுத்த உடனடியாக பிரதமர் தலையிட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார் 

தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:_

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 அப்பாவி மீனவர்கள் விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கடந்த 26_ம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் தனுஷ்கோடி அருகில் மீன் பிடித்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் மீனவர்கள் மயிரிழையில் உயிர்தப்பினர். அவர்களின் படகு சேதம் அடைந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் மீன் பிடிப்பதை நிறுத்திவிட்டு, தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக தப்பி வந்துள்ளனர். ஏற்கனவே அப்பாவி தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த 75 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்ககப்பட்டு இருப்பதோடு, அவர்களின் 35 படகுகளும் இலங்கை கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை தாங்கள் அறிவீர்கள்.

தமிழ மீனவர்கள் மீதான தேவையற்ற, இரக்கமற்ற மற்றும் மனிதாபிமானமற்ற தாக்குதல் காரணமாக மீனவ சமுதாயத்தினரிடையே விரக்தியும், கோபமும் அதிகரித்துள்ளது. இலங்கை கடற்படையினரின் இதுபோன்ற தொடர் தாக்குதல் மற்றும் சூறையாடும் நடவடிக்கைகளை நமது கடற்படையும், கடலோர காவல்படையும் தடுக்கவில்லை. தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.

எனவே, இலங்கை கடற்படையின் இந்த செயல்களை தாங்கள் வன்மையாக கண்டித்து, தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இது குறித்து உ.யர் மட்ட ராஜதந்திர ரீதியாக இலங்கை அரசுக்கு நெருக்குதலையும் அளிக்கவேண்டும். இந்த பிரச்சினையை இலங்கையின் அரசின் முன் கொண்டு சென்று உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். அத்துடன் தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா பகுதியில் அவர்களின் உயிர்கள், தொழில்கள் மற்றும் மீன்பிடி உரிமை பாதுகாப்புக்கு இந்தியா உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்