முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாட்னாவில் தொடர் குண்டுவெடிப்பு: தீவிரவாதிகள் 2 பேர் கைது

திங்கட்கிழமை, 28 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

பாட்னா,அக்.29 - பாட்னாவில் தொடர் குண்டுவெடித்தது தொடர்பாக 2 தீவிரவாதிகள் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரண்டு தீவிரவாதிகளில் ஒருவன்,தொடர் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. 

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள மகாத்மா காந்தி மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதா தலைவரும் குஜராத் மாநில முதல்வருமான நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். இந்த பொதுக்கூட்டத்தில் அவரது பேச்சைக்கேட்க லட்சக்கணக்கானோர் கூடியிருந்தனர். இந்த பிரமாண்டமான கூட்டத்திற்கு மோடி வருவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு 6 குண்டுகள் தொடர்ந்து வெடித்தன. மைதானத்தில் 2 குண்டுகளும் மைதானத்திற்கு அருகில் இருந்த ஒரு தியேட்டர் பக்கம் 4 குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 80_க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதில் 37 பேர் பாட்னாவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. மேலும் இந்த தொடர் குண்டுகள் வெடிப்பதற்கு முன்பு பாட்னா ரயில் நிலையத்திலும் புதியதாக கட்டப்பட்டுள்ள கழிவுறையில் பெட்ரோல் குண்டுவெடித்தது. அந்த இடத்தில் சோதனை நடத்தியபோது மேலும் 2 பெட்ரோல் குண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு செயல் இழக்க செய்யப்பட்டது. அப்போது ஒருவர் படுகாயம் அடைந்தார்.  இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த இடத்திற்கு தேசிய புலனாய்வு அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் தேசிய அதிரடி படையினர் விரைந்து வந்து மைதானம் மற்றும் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஏதாவது குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை அறிய தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் புலன் விசாரணையிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். முதலில் பலரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர்களுக்கும் குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது. இதனையொட்டி அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அதன் பின்னர் பலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் 2 பேர் தீவிரவாதிகள் என்பது தெரியவந்துள்ளது. இந்த இரண்டு தீவிரவாதிகளில் ஒருவன், தொடர் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. பிடிபட்டுள்ள அந்த 2 தீவிரவாதிகள் தவ்சிம், இம்தியாஜ், என்று தெரியவந்துள்ளது.மேலும் தீவிரவாதிகள் ஒரு குழுவாக மைதானத்திற்கு வந்தது தெரியவந்துள்ளது. இந்த குழுவில் 6 முதல் 8 பேர் இருந்திருக்கலாம் என்று போலீசார் நம்புகின்றனர். அந்த 2 தீவிரவாதிகளிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் தொடர்குண்டுவெடிப்பை எப்படி வெடிக்க செய்ய வேண்டும் என்பதற்கு நான்தான் திட்டம் தீட்டினேன் என்று அந்த இரண்டு தீவிரவாதிகளில் ஒருவன் ஒப்புக்கொண்டு இருப்பதாக பாட்னா நகர் சிறப்பு போலீஸ் அதிகாரி மனுமகாராஜ் தெரிவித்துள்ளார். பிடிபட்டுள்ளவர்களிடம் தீவிரமாக விசாரணை செய்து வரும். விரைவில் அனைத்து விபரமும் தெரிந்துவிடும் என்றும் அவர் மேலும் கூறினார். விசாரணையின்போது கிடைத்த தகவலையொட்டி ராஞ்சி மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் இதர பகுதிகளுக்கும் போலீசார் சென்று சோதனை நடத்தினர். அப்போது அதிக சக்தி வாய்ந்த குண்டுகளை தயாரிக்க பயன்படும் வெடிமருந்து பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மைதானத்திற்கு வெளியே சோதனை நடத்தியதில் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஒரு குண்டு கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.  இதற்கிடையில் தீபாவளியையொட்டி தீவிரவாதிகள் தங்களுடைய கைவரிசையை காட்டலாம். அதனால் உஷாராக இருக்கும்படி மாநில அரசுகளை மத்திய அரசு உஷார்படுத்தியுள்ளது. மேலும் தேர்தல் நடக்கவிருக்கும் 5 மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரத்தின்போது உஷாராக இருக்கும்படியும் பிரசாரத்தில் ஈடுபடும் தலைவர்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு கொடுக்கும்படியும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 

உத்திரப்பிரதேச மாநிலத்தில் முஜாபர் நகரில் முஸ்லீம்கள் தாக்கப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் குண்டுவைத்ததாக தீவிரவாதிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இவர்கள் அனைவருமே இந்திய முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த அமைப்பின் தலைவர் யாசின் பக்தல் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவனுடைய நெருங்கிய கூட்டாளி தெசின் அக்தர் தலைமையில் சதித்திட்டம் தீட்டி இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இம்மாத துவக்கத்தில் அன்சாரியை சந்தித்த அக்தர், அவரிடம் வெடிகுண்டுகளை கொடுத்துள்ளார். அன்சாரியும் மற்றவர்களும் சேர்ந்து மற்றவர்களும் சேர்ந்து குண்டுவெடிப்பை நிகழ்த்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. பீகார் மாநிலத்தில் உள்ள புத்த கயாவில் கடந்த ஜூலை மாதம் நடந்த குண்டுவெடிப்பிலும் இவர்கள்தான் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. பீகார் மாநில உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் ராஞ்சியில் அன்சாரி வீட்டில் இருந்து குக்கர் வெடிகுண்டுகள், துண்டுபிரசுரங்கள் பென்டிரைவுகள் உள்ளிட்டவை கைப்பட்டுள்ளதாக கூறினார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்