முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி - சபாநாயகரிடம் ஜேபிசி இறுதி அறிக்கை தாக்கல்

புதன்கிழமை, 30 அக்டோபர் 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, அக்.31 - 2ஜி அலைக்கற்றை கொள்கை விலை நிர்ணயம் ஆகியவை தொடர்பாக விசாரணை நடத்திய நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் இறுதி அறிக்கையை அதன் தலைவர் பி.சி.சாக்கோ மக்களவைத் தலைவர் மீராகுமாரிடம் வழங்கினார்.       நாடாளுமன்ற கூட்டத் தொடர் தற்போது நடைபெறாததால் குழுவின் அறிக்கையை அவர் மீராகுமாரிடம் அளித்தார்.

 இந்த அறிக்கை வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின்போது முறைப்படி இரு அவைகளிலும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிக்கையை இறுதி செய்வதற்காக கடந்த மாதம் 27_ம் தேதி ஜேபிசி கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பாஜக , இந்திய, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக, திமுக, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ஜேபிசி உறுப்பினர்கள் அறிக்கைக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் கடிதங்களை சாக்கோவுக்கு அனுப்பினர். விதிகளின்படி அந்த கடிதங்களையும் இறுதி அறிக்கையில் சேர்த்து அவர் மீராகுமாரிடம் வழங்கினார். ஆனால் அவற்றில் சில கட்சிகள் அளித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வரிகள் ஆட்சேபகரமானவை என்று கருதி அவற்றை சாக்கோ திருத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி சாக்கோ கூறியதாவது:

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யவும், உரிமம் வழங்கவும் மத்திய தொலைத் தொடர்புத் துறை மிகவும் அலட்சியமாக நெறிமுறைகளை பின்பற்றியுள்ளது. 1998_2009 வரை அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய கடைபிடிக்கப்பட்ட நடைமுறைகளை ஜேபிசி ஆராய்ந்துள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்குச் சாதகமாகவே  நடவடிக்கை எடுத்துள்ளது.

அலைக்கற்றை ஒதுக்கீடு பெறும் தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக அப்போது தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராசா செயல்பட்டுள்ளார். இந்த விஷயத்தில் பிரதமரை ராசா தவறாக வழி நடத்தியுள்ளார். 2008_ல் 12 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 122 உரிமங்களில் 85 உரிமங்கள் தகுதியற்ற நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. குறைபாடுகள் நிறைந்த இந்த நடவடிக்கையை சரிசெய்ய அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

தொலைத் தொடர்பு அலைக்கற்றை வழங்கும் கொள்கை நடைமுறைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு ஏதுவாக வயர்லெஸ் திட்டமிடல் ஒருங்கிணைப்புத் துறையை கட்டமைப்பு ரீதியாக வலுப்படுத்த வேண்டும். அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான எல்லா ஆவணங்களையும் அத்துறையே பதிவு செய்து வைத்திருக்கும் வசதியை உருவாக்க வேண்டும்.  

தொலைத்தொடர்பு உரிமம் பெற்ற நிறுவனங்கள் எவ்வளவு அலைக்கற்றையைப் பயன்படசுத்துகின்றன என்பதை ஆராய தற்போது வசதி இல்லை. ஆராயும் பணியை தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொள்ள வேண்டும். அவ்வப்போதுஅலைக்கற்றை பயன்பாட்டு நிலவரத்தை இணையத்தில் வெளியிட வயர்லெஸ் திட்டமிடல், ஒருங்கிணைப்புப் பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற ஏராளமான பரிந்துரைகள் இறுதி அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ளன என்றார் சாக்கோ. 

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் ஜக்மோகன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது தனியார் தொலைத்  தொடர்பு நிறுவனங்களுக்கு அலைக்கற்றை கட்டணம் நிர்ணயித்ததில் சலுகை வழங்கியது குறித்து ஜேபிசி இறுதி அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அந்த நடவடிக்கையால் அரசுக்கு சுஆர் ரூ. 42 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் ஜக்மோகன், அப்போதைய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோரின் எதிர்ப்பையும் மீறி அச்சலுகையை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அளித்தது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago