முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர். வழிவந்த ஜெயலலிதா அரசு புரட்சிகரமாக செயல்பட்டு-வெள்ளையன் வாழ்த்து

திங்கட்கிழமை, 16 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை,மே.- 16  - எம்.ஜி.ஆர். வழிவந்த ஜெயலலிதா அரசு, புரட்சிகரமாக செயல்பட்டு, புதிய வரலாறு படைக்க வாழ்த்துகிறோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் கூறியதாவது:​ நடந்து முடிந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்ற அ.தி.மு.க.வுக்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். சாமானிய மக்களை வெகுவாக பாதித்திருக்கும் விலைவாசியைக் குறைக்கவும் மின்வெட்டை சீர்செய்யவும் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு முதல்​அமைச்சர் பொறுப்பேற்க இருக்கும் ஜெயலலிதாவை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இந்த தேர்தலில் முதலில் வெற்றி பெற்றது தேர்தல் ஆணையமே. தேர்தல் ஆணையத்தின் சிறப்பான செயல்பாட்டினால் பணபலம் தடுக்கப்பட்டு, மக்களின் உணர்வு சார்ந்த உண்மையான விருப்பம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. சற்றே சிரமங்கள் ஏற்பட்டாலும் தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து வியாபாரிகளுக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்கள் வணிகர் பேரவை நடத்திய விலைவாசி உயர்வு எதிர்ப்பு மாநாடு அமோக வெற்றி பெற்றதைப் போல அதன் கருத்தின் வலிமையும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கின்றது என்பது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. அரசின் கஜானா சார்ந்த பொருளாதாரக் கொள்கைகள் கைவிடப்பட்டு மக்கள் நலனும் மக்களின் சுயதொழில்களும் காக்கப்பட வேண்டும்.
அந்நிய ஆதிக்கத்தில் இருந்து நாட்டின் சுதந்திரம் காக்கப்படவேண்டும். அதற்கு ஏற்றாற்போல் தவறான பொருளாதாரக் கொள்கைகள் கைவிடப்பட வேண்டும். அதற்கு எம்.ஜி.ஆர். வழிவந்த ஜெயலலிதா அரசு புரட்சி கரமாக செயல்பட்டு புதிய வரலாறு படைக்க வாழ்த்துகிறோம். இவ்வாறு த.வெள்ளையன் கூறினார். அவருடன் பொதுச் செயலாளர் கே.தேவராஜ், நிர்வாகிகள் சி.எல்.செல்வம், கந்தசாமி, சவுந்தர்ராஜன், ப.தேவராஜ், ராஜேந்திரன், கோவிந்தன், சுப்பையா பாண்டியன் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்