முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்வேறு மாவட்டங்களில் விளையாட்டு அரங்க விடுதிகள்

வியாழக்கிழமை, 14 நவம்பர் 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, நவ.15 - 11.11.2013 அன்று தலைமைச் செயலகத்தில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், அண்ணா விளையாட்டரங்கில் கட்டப்பட்டுள்ள உள்ளரங்க ஸ்குவாஷ் ஆடுகளம், திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கில் கட்டப்பட்டுள்ள கூடைப்பந்து உள் விளையாட்டரங்கம், அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கில் கட்டப்பட்டுள்ள நீச்சல் குளம், கரூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள மாவட்ட விளையாட்டு வளாகம், கடலூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு விடுதிகள், என மொத்தம் 4 கோடியே 64 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களை திறந்து வைத்தார்கள். மேலும், 10 கோடியே 7 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

விளையாட்டின் மீதான ஆர்வத்தை இளைஞர்களிடம் ஊக்குவிக்கும் வகையில் 1992_ஆம் ஆண்டு இளைஞர் மற்றும் விளையாட்டுப் பயிற்சித் துறை மற்றும் தமிழ்நாடு மாநில விளையாட்டு வளர்ச்சி வாரியம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை முதல்வர் ஜெயலலிதா உருவாக்கினார். மாவட்டங்களில் பல்வேறு விளையாட்டுகளில்  விளையாட்டு வீரர்களை  ஊக்கப்படுத்தி, பயிற்சி அளித்து, அவர்கள் மாநில, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று  வெற்றி பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.  மேலும், விளையாட்டு வீரர்களுக்கு தேவையான சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட  விளையாட்டு அரங்குகளை அமைத்து  பராமரித்து வருகிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், அண்ணா விளையாட்டரங்கில் 16 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மரத்திலான தளம், கண்ணாடி தடுப்பு சுவர், மின்னொளி அமைப்பு, குளிர்சாதன வசதியுடன் கட்டப்பட்டுள்ள உள்ளரங்க ஸ்குவாஷ் ஆடுகளம் ; திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கில் 57 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மின்னொளி வசதியுடன் கூடிய கூடைப்பந்து உள் விளையாட்டரங்கம்; அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2327.94 சதுர மீட்டர் பரப்பளவு  கொண்ட  நீச்சல் குளம்; கரூர் மாவட்டத்தில் 1 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 400 மீட்டர் ஓடுதளம், கூடைப்பந்து, கையூந்துப் பந்து, கால்பந்து, கபடி, கோ_கோ ஆடுகளங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி  கட்டப்பட்டுள்ள மாவட்ட விளையாட்டு வளாகம்; கடலூர் மாவட்டத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு மாணவர்களுக்கான விடுதி; திண்டுக்கல் மாவட்டத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு  மாணவியர்களுக்கான  விடுதி;

என மொத்தம் 4 கோடியே 64 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளம், விடுதிகள் ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா 11.11.2013 அன்று திறந்து வைத்தார்.

மேலும், விருதுநகர் மாவட்டத்தில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நீச்சல் குளம் ; திருநெல்வேலி மாவட்டம், அண்ணா விளையாட்டு அரங்கில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான செயற்கை இழை ஓடுதளப் பாதை ; அரியலூர், நாமக்கல், சிவகங்கை, தேனி, தூத்துக்குடி மாவட்டங்களில் தலா 55 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான விளையாட்டு மாணவ, மாணவியருக்கான  விடுதிகள் ; தூத்துக்குடி மாவட்டத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம் ;

என மொத்தம் 10 கோடியே 7 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான விளையாட்டு சார்ந்த  கட்டடங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா 11.11.2013 அன்று அடிக்கல்  நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் கே.சி. வீரமணி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருழணன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் முகமது நசீமுத்தின்,   தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் க. இராஜாராமன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்