முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி

சனிக்கிழமை, 16 நவம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, நவ. 17 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற 2_வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 1 இன்னிங்ஸ் மற்றும் 126 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி  பெற்றது. 

இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2_ 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. மே.இ.தீவு அணி இந்தத் தொடரில் வாஷ் அவுட்டானது. 

முதல் இன்னிங்சில் அபாரமாக பந்து வீசிய இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளர்கள் 2_வது இன்னிங்சிலும் சிறப்பாக பந்து வீசி மே.இ.தீவு அணியை சுருட்டினர். 

முக்கியமாக ஓஜா 5 விக்கெட்டையும், அஸ்வின் 4 விக்கெட்டையும் வீழ்த்தினர். வேகப் பந்து வீச்சாளர் மொகமது சமி 1 விக்கெட் எடுத்தார். 

கேப்டன் டேரன் சம்மி தலைமையிலான மே.இ.தீவு அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணிக்கு எதிராக விளையாடியது. 

இந்தியா மற்றும் மே.இ.தீவு அணிகளுக்கு இடையேயான 2_வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் உள்ள வாங்க்டே மைதானத்தில் 14_ம் தேதி முதல் 16_ம் தேதி வரை நடைபெற்றது. 

இந்தப் போட்டியில் முன்னதாக டாசை வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கி ய மே.இ.தீவு அணி ரன் எடுக்க திணறியது. 

மே.இ.தீவு அணி இறுதியில் முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 182 ரன்னை எடுத்தது.  அந்த அணி தரப்பில் போவெல் 48 ரன்னும், சந்தர்பால் 26 ரன்னும், சாமுவேல்ஸ் 28 ரன்னும் எடுத்தனர். 

இந்திய அணி சார்பில் சுழற் பந்து வீச்சாளர் பிரக்ஞான் ஓஜா 5 விக்கெட் வீழ்த்தினார். அஸ்வின் 3 விக்கெட் எடுத்தார். தவிர, மொகமதுசமி மற்றும் புவனேஷ்வர் குமார் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

பின்பு முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி மே.இ.தீவு பந்து வீச்சை எளிதாக சமாளித்து ஆடி ரன்னைக் குவித்தது. இறுதியில் அந்த அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 495 ரன் எடுத்தது. 

இந்திய அணி தரப்பில், புஜாரா மற்றும் ரோகித் சர்மா இருவரும் சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். புஜாரா 113

ரன்னும், ரோகித் சர்மா 111 ரன்னும் எடுத்தனர். 

கடைசி டெஸ்டான இதில் நட்சத்திர வீரர் டெண்டுல்கர் 74 ரன் எடுத்தார். மே.இ.தீவு அணி சார்பில், டினோ பெஸ்ட் 5 விக்கெட் கைப்பற்றினார். 

பின்பு 2_வது இன்னிங்சை ஆடிய மே.இ.தீவு அணி முதலில் சற்று தாக்குப் பிடித்தாலும் பின்பு தடுமாறியது. இறுதியில் அந்த அணி 47ஓவரில் 

187 ரன்னில் ஆட்டம் இழந்தது. 

இதனால் இந்திய அணி இந்த 2_வது டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 126 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடரை 2_ 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள புகழ் பெற்ற ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இதிலும் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

மே.இ.தீவு அணி சார்பில், கீப்பர் ராம்டின், சந்தர்பால் , கிறிஸ்கெய்ல் ஆகியோர் தாக்குப் பிடித்து ஆடினர். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னிலேயே ஆட்டம் இழந்தனர். ராம்டின்அதிகபட்சமாக 53

ரன்னையும்,  கெய்ல் 34 ரன்னையும் 

 எடுத்தனர். 

இந்திய அணி தரப்பில், ஓஜா 5 விக்கெட் கைப்பற்றினார். அஸ்வின் 4 விக்கெட் எடுத்தார். மொகமது சமி 1 விக்கெட் எடுத்தார். 

முதல் இன்னிங்ஸ் மற்றும் 2_வது இன்னிங்சில் தலா 5 விக்கெட் மூலம் மொத்தம் 10 விக்கெட் கைப்பற்றிய பிரக்ஞான் ஓஜா இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

முதல் போட்டி மற்றும் 2_வது டெஸ்டில் அடுத்தடுத்து சதம் அடித்த ரோகித் சர்மா இந்தத் தொடரின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்